யோகா டீச்சராக மாறிய ஷில்பா-சிடி வெளியிடுகிறார்!

ஷில்பாவின் சினிமா பிளஸ் பொது வாழ்க்கையை லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முன்பு, பின்பு என இரண்டாகப் பிரிக்கலாம். லண்டன் வெற்றிக்கு முன்னர், ஷில்பா பாலிவுட்டில் ராசியில்லாத நடிகையாக அறியப்பட்டவர். கவர்ச்சிகரமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்த நடிகையாக வலம் வந்த ஷில்பா, லண்டன் வெற்றிக்குப் பின்னர் தலைகீழாக மாறிப் போனார்.
லண்டன் வெற்றிக்குப் பின்னர் படு பிசியாக மாறிய ஷில்பா, அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே கொடுத்த வலுக்கட்டாய முத்தத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார் ஷில்பா. ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கொந்தளித்தார் ஷில்பா.
இதைத் தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த ராஜ் குந்தாரா என்ற தொழிலதிபருடன் ஷில்பாவுக்கு ஏற்பட்ட காதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ் குந்தாரா தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரை ஷில்பா வளைத்து விட்டார் என ராஜ் குந்தாராவின் மனைவி குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இதை ஷில்பாவும், குந்தாராவும் மறுத்தனர். நான் ராஜ் குந்தாராவை காதலிக்கவே இல்லை என்றும் ஷில்பா கூறினார். ஆனால் இருவருக்கும் இடையிலான காதல் முற்றி இப்போது கல்யாணத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதை ஷில்பாவே தனது வாயால் சூசகமாக தெரிவித்துள்ளார். ராஜ் குந்தாரா தனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத முக்கிய நபராக மாறியுள்ளதாக ஷில்பா கூறியுள்ளார்.
குந்தாரா குறித்து ஷில்பா கூறுகையில், குந்தாரா மிகப் பெரிய தொழிலதிபர். அவருடன் எனக்குள்ள உறவு குறித்து பேசுவது மிக மிக தனிப்பட்ட விஷயம். அவர் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவர். எங்களுடைய திருமணம் எப்போது, எங்கே, எந்த நேரத்தில் நடைபெறும் என்று அனைத்து விபரங்களையும் என்னால் இப்போது கூற முடியாது.
ஆனால், சரியான நேரம் வரும்போது நானே அறிவிப்பேன். நான் திருமணம் முடிந்து செட்டில் ஆக விரும்புகிறேன்.
தவறான காரணங்களுக்காக பத்திரிகைகளால் நான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டேன். ஆனால் என்னை பற்றி சர்ச்சைகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போகும்போது அதை பத்திரிகைகள் குறிப்பிடுவது இல்லை என்று கூறியுள்ளார் ஷில்பா.
இதற்கிடையே, யோகாசனம் குறித்த சிடி ஒன்றை உருவாக்கியுள்ளார் ஷில்பா. படு கவர்ச்சிகரமாக அந்த சிடியில் யோகா குறித்து விளக்கி நடித்துள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சிடி வெளியாகவுள்ளதாம்.
இங்கிலாந்தை இந்த சிடி கலக்கப் போகிறது. இங்கிலாந்து நாட்டவருக்காகவே இந்த சிடியை உருவாக்கியுள்ளாராம் ஷில்பா.
சும்மா சொல்லக் கூடாது, ஷில்பா ஷெட்டி, யோகாவிலும் கெட்டியாகவே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











