விவாகரத்து வழக்கு - நடிகை சுகன்யாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகை சுகன்யாவுக்கும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002, ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பாலாஜி கோவிலில், இந்து சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது.
கடந்த 2003ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா திரும்பிய சுகன்யா, நிரந்தரமாக இங்கு தங்கிவிட்டார். பின், கடந்த 2004ல் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கோர்ட்டில் ஸ்ரீதரன் ஆஜராகாததால்,வழக்கு சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து ஸ்ரீதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
"அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றதால் தமிழ்நாட்டில் வழக்கு போட தடை விதிக்க வேண்டும். சுகன்யாவின் மனுவை தள்ளுபடி செய்துவிடவேண்டும்," என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
ஜூலை 12ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, "வெளிநாட்டில் திருமணமானாலும் ஒரு பெண் வாழும் ஊரில் வழக்கு போடலாம்" என்று மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், ஸ்ரீதரன் மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவில், "நான் அமெரிக்காவில் வசித்து வருவதால், என் மீது இங்கு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. எங்களது திருமணமும் அமெரிக்காவில்தான் நடந்து, பதிவு செய்யப்பட்டது.
இந்து திருமணச் சட்டம் இந்த வழக்கை பொறுத்த வரை பொருந்தாது. நானும், இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் வேண்டுமானால் இந்த சட்டம் பொருந்தும். எனவே, இந்த விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,"என்று தெரிவித்திருந்தார்.
சுகன்யாவின் கணவர் ஸ்ரீதரன் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், செப்.18 ம் தேதிக்குள் பதிலளிக்க நடிகை சுகன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











