கோபிகாவுக்கு டும்..டும்..டும்..!

கேரளாவில் கோத்தமங்கலத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் இருவருக்கும் வரும் ஜூலை 17ம் தேதி திருமணம் நடக்கிறது.
திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், லண்டனிலேயே குடியேறிவிடப் போவதாகவம் கோபிகா அறிவித்துள்ளார்.
சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழில் அறிமுகமானவர் கோபிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுவிட்டார்.
நிறைய வாய்ப்புகள் வந்தாலும், கனா கண்டேன், எம் மகன் என தேர்ந்தெடுத்துப் படங்களை ஒப்புக் கொண்ட கோபிகாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளித்திரை. இடையில் தெலுங்கிலும் நடித்தார்.
மலையாளத்தில் அண்ணன் தம்பி, வருதே ஒரு பார்யா மற்றும் ட்வெண்டி: 20 படங்களோடு தனது கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டார். திருமணப் பேச்சு எழத் தொடங்கியதுமே எந்த மொழியிலும் புதுப்படங்களை ஒப்புக் கொள்வதை கடந்த சில மாதங்களாகவே நிறுத்திவிட்டார் கோபிகா.
இந் நிலையில் கேரளா எர்ணாகுளத்தைச் சேர்ந்த சாக்கோ- தங்கம்மாவின் தம்பதியின் மகன் டாக்டர் அகிலேஷை கோபிகாவுக்கு பேசி முடித்தனர் அவரது பெற்றோர். அகிலேஷ் அயர்லாந்தில் எப்ஆர்சிஎஸ் பட்டம் பெற்று இங்கிலாந்தில் மருத்துவத் துறையில் செட்டிலானவர். கடந்த மே 22ம் தேதி இருவருக்கும் ஒல்லூரில் உள்ள கோபிகா வீட்டில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
திருமணம் குறித்து கோபிகா தட்ஸ்தமிழ் நிருபருக்கு அளித்த பேட்டி:
தமிழ், மலையாளம் ரசிகர்கள் என்னை தங்களில் ஒருத்தியாக நினைத்து ஆதரவளித்தனர். அவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய சந்தோஷம், நிறைவு எனக்கு இப்போது கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பது, அல்லது திரைத்துறை சார்ந்த எதிலும் பங்கு பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கிலாந்திலேயே நானும் குடியேறிவிடப் போகிறேன்.
ஒரு நல்ல, நிறைவான சினிமா கேரியருடன் விலகுவது சந்தோஷமாக உள்ளது. எந்த விதத்திலும் நான் வருத்தப்படவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











