தங்கச்சியுடன் காணாமல் போன காத்ரீனா கைப்

சமீபத்தில் மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போன இடத்தில் சொகுசுக் கப்பலில் இருந்த கூட்டத்தில் காணாமல் போய் மீண்டு வந்தார் திரிஷா. தற்போது அதே ரேஞ்சில் காணாமல் போய் மீண்டுள்ளார் காத்ரீனா கைப்.
காத்ரீனா கைப் தற்போது ஜோயா அக்தரின் ஜிந்தகி நா மிலேகி டோபோரா என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்பெயினில் நடந்தது. இதில் தனது தங்கச்சி இஸபெல்லேவுடன் கலந்து கொண்டார் காத்ரீனா.
அவர்கள் தங்கியிருந்த பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாம். சுற்றிலும் அழகான மலைகளும் இருந்ததால் அந்த எழிலில் தனது மனதை (சல்மானுக்குப் போக மீதம் உள்ளதை) பறிகொடுத்தார் காத்ரீனா.
இதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தங்கச்சியுடன் கிளம்பி விட்டார். ஆனால் காலை உணவுக்கு அவர் வரவில்லை. இதனால் காத்ரீனா எங்கே என்று படக்குழுவினர் தேடத்தொடங்கினர். ஆனால் அவரைக் காணாததால் பதட்டமடைந்தனர்.
நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததால் பீதி அதிகரித்தது. போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அந்த சமயத்தில் காத்ரீனாவும் இஸபெல்லேவும் அங்கு வரவே அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதட்டத்துடன் இருந்த படக்குழுவினரை அமைதிப்படுத்திய காத்ரீனா, தாங்கள் எங்கு போனோம் என்பதை விவரித்தார். மலைகளைப் பார்க்கப் போனதாகவும், ஆனால் திரும்பி வரும்போது பாதை மாறிப் போய் விட்டதாகவும் மிகுந்த சிரமப்பட்டு இருப்பிடத்தை அறிந்து வந்து சேர்ந்ததாகவும் கூறி பெருமூச்சு விட்டார் காத்ரீனா.
காணாமல் போய் மீண்டு வந்த காத்ரீனா மற்றும் அவரது தங்கச்சியைப் பார்த்த பிறகே படக்குழுவினருக்கு மூச்சு வந்ததாம்.
பாதை மாறிப் போவது எப்போதுமே ஆபத்துதான், காத்ரீனா கவனம்!


Click it and Unblock the Notifications











