வேட்பு மனு..குலதெய்வ கோயிலில் ரோஜா!

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா, இந்தத் தேர்தலில் வென்றால் மிக முக்கிய பதவி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார் ரோஜா.
எனவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முன், குலதெய்வம் கோயில்களில் வைத்து பூஜை செய்தார் ரோஜா.
சந்திரகிரியில் உள்ள நாகம்மா கோவில், மூலஸ்தானி எல்லம்மா கோவில், ராயலபுரத்தில் உள்ள மாத்தம்மா கோவில்களுக்குச் சென்றார். பின்னர் வேட்பு மனுவை அக்கோவில்களின் கருவறையில் வைத்து பூஜை செய்தார்.
தொண்டர்கள் புடைசூழ வந்த ரோஜாவுக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் அவர் சந்திரகிரியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை நல்ல நேரத்தில் தாக்கல் செய்தார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவும் சென்றிருந்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்து வெளியில் வந்த ரோஜா, "இந்தத் தொகுதியில் எனக்கு எதிரான எதிரான பிரச்சாரத்தை முறியடிப்பேன். நிச்சயம் வெற்றி பெறுவேன். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்..." என்றார் நிருபர்களிடம்.


Click it and Unblock the Notifications











