உதயநிதியின் அடுத்த ஹீரோயின் நயன்!!

வில்லங்கமா நினைக்காதீங்க... விவரமான செய்தி இதோ!
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகத் தயாரித்த குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் நயன்தாரா. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகும், நயனின் அந்த வாய்ப்பைப் பறித்தார் த்ரிஷா.
ஒருவழியாக குருவி ரிலீசாகி 100 நாட்களை நெருங்குகிறது. படம் குறித்து பலவித விமர்சனங்கள் இருந்தாலும், முதல் படத்திலேயே நல்ல லாபம்தானாம் தயாரிப்பாளருக்கு. இப்போது தனது இரண்டாவது படத்தைத் தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் தொழில்முறை இயக்குநர் எனப்படும் கே.எஸ்.ரவிக்குமார். ஜக்குபாயை முடித்த கையோடு இந்தப் படத்துக்கு பூஜை போட முடிவெடுத்துள்ளார் ரவிக்குமார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு இசையமைத்துத் தருமாறு ஏஆர் ரஹ்மானிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளாராம் உதயநிதி.
இந்தப் படத்தின் நாயகன் சூர்யா. நயன்தாராவும் சூர்யாவும் ஜோடியாக நடிக்கும் முதல்படம் இதுதான். ஏற்கெனவே இருவரும் கஜினியில் நடித்திருந்தாலும், இதில்தான் ஜோடியாக நடிக்கிறார்கள்.
நயன்தாரா தமிழில் தொடர்ச்சியாக நடிக்கும் 6-வது மெகா பட்ஜெட் படம் இது. ஏற்கெனவே அஜீத்துடன் ஏகன், விஜய்யுடன் வில்லு, கார்த்தியுடன் ஒரு படம் என பெரிய பெரிய படங்களில் நயன்தான் நாயகி. இப்போது கமலுக்கும் ஜோடியாக மர்மயோகியில் நடிக்கக்கூடும் எனப் பேசப்படுகிறது.
காட்டுல மழை என்பார்களே... இதுதானோ?


Click it and Unblock the Notifications











