சிறுவனைக் காப்பாற்றிய நடிகை அசினுக்கு காயம்!

நடிகை அசின் இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்து வெளி வந்துள்ள படம் கஜினி மட்டும்தான். ஆனால் வசூலில் அந்தப் படம் போட்ட போடில் அரண்டு போயிருக்கிறது மொத்த பாலிவுட்டும்.
இப்போது முன்னணி நடிகர்கள் பலரும் அசினையே நாடுவதால் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இன்னொரு ஸ்ரீதேவி என மும்பை பத்திரிகைகள் புகழாரம் சூட்டிவரும் நிலையில், மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் அசின்.
நேற்று வியாழக்கிழமை மும்பை அந்தேரியில் 'இன்பினிட்டி மால்' அருகே காரில் சென்று கொண்டிருந்தார் அசின். அப்போது சாலையில் அதிவேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை அறியாமல் ஒரு சிறுவன் சாலையைக் கடக்க முயல, கார் அவன் மீது மோதிவிடும் நிலை ஏற்பட்டது.
இதைப் பார்த்த அசின், உடனே தனது காரை நிறுத்தி இறங்கி நடுரோட்டுக்கு ஓடினார். அந்தச் சிறுவனை தூக்கி பாதுகாப்பாக ஓரத்தில் கொண்டுவிட்டார்.
ஆனால் அந்தச் சிறுவனை தூக்கி வந்தபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்துவிட்டார் அசின். இதில் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அசினின் மனிதாபிமானத்தைக் கண்டு வியந்துபோய் அவரைப் பாராட்டினர்.
நிஜமாகவே பாராட்டுக்குரிய செயல்தான்!


Click it and Unblock the Notifications











