எனது கணவரை கடத்தி வைத்துள்ளார் 'ஆவி' அமுதா- கனகா

தமிழ் திரையுலகில் மார்க்கெட் இழந்த முன்னாள் முன்னணி நடிகை கனகா, நேற்று முன்தினம் தனக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற என்ஜினீயருக்கும் கடந்த 2007ம் ஆண்டு ரகசிய திருமணம் நடந்ததாகவும், 15 நாட்கள் மட்டும் வாழ்ந்து விட்டு அவர் மாயமாகி விட்டார் என்றும் கூறினார்.
தனது கணவரை தேடிக்கொண்டிருப்பதாகவும், முதல்வரிடம் இதுபற்றி மனு கொடுக்கப்போவதாகவும் கூறிய கனகா, ஆவி அமுதாவை பார்க்கச் சென்ற இடத்தில் தான் முத்துக்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தப் புகாரைக் கூறிய பின்னர் கனகாவையும் காணவில்லை. ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கனகாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது.
அவருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தலைமறைவாகியிருக்கலாம் என மாறுபட்ட செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை திடீரென்று கனகா வீடு திரும்பினார். அவரைப் பார்க்க செய்தியாளர்கள் கூடினர். ஆனால் யாரையும் அவர் சந்திக்கவில்லை.
இருப்பினும் சில செய்தியாளர்கள் கனகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கனகா கூறுகையில்,
எனது கணவர் முத்துக்குமாரும், அருண்குமார் என்பவரும் நண்பர்கள். அருண்குமாரும் அவரது மனைவி பிரியாவும் ஆவி அமுதாவை சந்திப்பதற்காக அடிக்கடி வருவது வழக்கம்.
எனது தாய் தேவிகாவின் ஆவியுடன் பேசுவதற்காக நானும் ஆவி அமுதாவை சென்று பார்த்தேன். அப்போது ஆவி அமுதா என்னிடம் முத்துக்குமாரை அறிமுகப்படுத்தினார். இவர் எனது நண்பர். ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார். இருவரும் பேசுங்கள். பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
அவர் கூறியதை நம்பியே நான் முத்துக்குமாரை திருமணம் செய்து கொண்டேன். அவர் எனது கணவர் முத்துக்குமாரை கடத்தி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதற்கு எனது தந்தையும் உடந்தை என்று கருதுகிறேன். இது குறித்து விரைவில் போலீசில் புகார் செய்ய உள்ளேன்.
எனது கணவர் கலிபோர்னியாவில் இருக்கிறார். ஒருநாள் பேசுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்றார்.
உங்களது தந்தை தேவதாஸ் தொடர்பு கொள்ள சொல்லி கடிதம் எழுதி வைத்துள்ளாரே? என்ற கேள்விக்கு, அவர் காணாமல் போகவில்லையே... எனது கணவர் தானே காணாமல் போயுள்ளார் என்றார் கனகா.
இத்தனை காலமாக கணவர் காணாமல் போனது தொடர்பாக ஏன் புகார் கொடுக்கவில்லை, முத்துக்குமார் யார், உண்மையில் என்ன நடந்தது என்பது உள்பட பல கேள்விகளுக்கு கனகாவிடமிருந்து பதில் வரவில்லை.
வழக்குப் போடுவேன்- 'ஆவி' அமுதா
இந்த நிலையில் தனது பெயரை இந்த விவகாரத்தில் இழுத்துள்ளதற்காக கனகாவுக்கு ஆவி அமுதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆவி அமுதா ஒரு மாலை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், 'கடந்த 2007ம் ஆண்டு கனகா என்னைப்பார்க்க வந்தது உண்மை தான். அதன் பிறகு, அவர் என்ன செய்கிறார், யாரை திருமணம் செய்து கொண்டார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
முத்துக்குமார் என்பவரை நான் அறிமுகம் செய்து வைத்ததாக கனகா கூறியுள்ளார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் பார்த்தது கூட இல்லை.
முத்துக்குமாரை, நான் அறிமுகம் செய்து வைத்தது உண்மையென்றால் எனக்கு அழைப்பு விடுத்திருப்பாரே, ஏன் என்னை அழைக்கவில்லை?.
3 ஆண்டுகளாக நான் தியானம் மட்டுமே கற்றுக் கொடுத்து வருகிறேன். பொதுத்தொண்டு போல இதனை செய்து வருகிறேன். 2007ல் தனக்கு திருமணம் நடந்ததாக கனகா கூறியுள்ளார்.
என்னைப் பார்க்க வந்த ஒருவருடன் கனகா பழகி இருக்கலாம். அவரையே திருமணமும் செய்திருக்கலாம். இதற்கு நான் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். என்னைப்பற்றி அவர் கூறிய தகவலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளேன்.
எனவே கனகா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்' என்று கூறியுள்ளார் அமுதா.


Click it and Unblock the Notifications











