சுயசரிதை எழுதும் ரேகா

மும்பை பந்த்ராவில் வசித்து வரும் முன்னாள் காந்தக் கண்ணழகி ரேகா, சத்தம் போடாமல் தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். கடந்த 50 ஆண்டு கால வாழ்க்கையை அவர் நூலாக வடித்துக் கொண்டிருக்கிறார்.
இதை வெறும் புத்தமாக மட்டும் வெளியிடாமல் திரைப்படமாகவும் எடுக்க ஆவலாக உள்ளாராம் ரேகா.
இதுகுறித்து ரேகா மனம் திறந்து கூறுகையில், எனது கடந்த கால வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை நான் தொகுத்துக் கொண்டிருப்பது உண்மைதான். எனது பழைய நினைவுகளை கோர்வையாக்கி வருகிறேன்.
கடந்த காலத்தில் நான் சந்தித்தது, எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரையும் எனது நூலில் கூறப் போகிறேன். என்னை விரும்பியவர்கள், என் மீது அன்பு கொண்டவர்கள் என அனைவரையும் அதில் சொல்லப் போகிறேன்.
எல்லோரையும் விட முக்கியமாக எனது தாயாரைப் பற்றி நிறைய சொல்லப் போகிறேன்.
இதை நூலாக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், திரைப்படமாகவும் உருவாக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
எனது அனுபவங்களைச் சொல்வதோடு, நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லவும் இந்த சுயசரிதையை எழுதுகிறேன்.
சிலவற்றை நாம் சொல்லால் சொல்லி முடித்து விட முடியாது. எனவேதான் எனது சுயசரிதையை திரைப்படமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
விரைவில் எனது நூல் மற்றும் திரைப்படம் குறித்த அறிவிப்புகளை வெளியிடவுள்ளேன். இன்னும் 2 மாதங்களில் இந்த வேலை முடியும் என எதிர்பார்க்கிறேன் என்றார் ரேகா.
ரேகாவின் இந்த அறிவிப்பால் பாலிவுட்டில் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாம் - காரணம் தனது நூலில் ரேகா யாரைப் பற்றியெல்லாம் புட்டுப் புட்டு வைக்கப் போகிறாரோ என்று.


Click it and Unblock the Notifications











