நந்தனா அறிமுகமாகும் கிருஷ்ணவேணி பஞ்சாலை!
"கிருஷ்ணவேணி பஞ்சாலை" - இந்தப் பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.
ஹீரோ ஹேமச்சந்திரன் - அவருக்கு ஜோடியாக நந்தனா இருவருமே புதுமுகங்கள். அஜயன் பாலா, சண்முகராஜா, பாலாசிங் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் தனபால் பத்மநாபன். படம் குறித்து தனபால் கூறுகையில், "1957 முதல் 1990 வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை கருவாக வைத்து திரைக்கதை எழுதியுள்ளேன். பஞ்சாலைகளை பின்னணியாக வைத்து உணர்வுப்பூர்வமான காதலை சொல்லப் போகிறேன்.
மில் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கேண்டீன் நேர பேச்சுகள், அனல் பறக்கும் கேட் கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா, தொழிற்சாலை குடியிருப்புகளில் உருவாகும் நட்பு என மற்றவர்களுக்கு வாய்க்காத வித்தியாசமான உலகத்தைக் கொண்டது. இன்றைய சாப்ட்வேர் இளைஞர்களின் வாழ்க்கை பார்க்கப்படுவது போல், அன்றைக்கு மில் தொழிலாளர்களின் வாழ்க்கை இருந்தது. அந்த வாழ்க்கையின் சந்தோஷங்களையும், வலிகளையும் பதிவு செய்யும் படம்தான் கிருஷ்ணவேணி பஞ்சாலை,'' என்றார்.
என்.ஆர்.ரஹ்நந்தன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications