எல்லா புகழும் அமீருக்கே!-பிரியாமணி

அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் முத்தழகி பாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகை ப்ரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்த ப்ரியாமணியை தட்ஸ்தமிழுக்காகத் தொடர்பு கொண்டோம்.
அவர் அளித்த பேட்டி...
"வாவ்... நான் வானத்தில் மிதப்பதைப் போல உணர்கிறேன். இந்த விருது எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்த அறிவிப்பைக் கேட்ட கணத்தை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன். எத்தனை பெரிய அங்கீகாரம்...
இந்தப் புகழ், விருது எல்லாவற்றுக்குமே காரணம் படத்தின் இயக்குநர் அமீர் சார்தான். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதைப் போல, நான் இந்தப் புகழையும் விருதையும் அமீருக்கே காணிக்கையாக்குகிறேன். என்னை முழுமையான நடிகையாக்கியவர் அவர்தான்.
பொதுவாக என்னை சொந்தக் குரலில் பேச யாரும் ஊக்கப்படுத்தியதில்லை. ஆனால் அமீர் இந்த வேடத்துக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து அப்போதே என்னை சொந்தக் குரலில் பேச உற்சாகப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை...
என்னுடன் நடித்த கார்த்தி மற்றும் என்னை அத்தனை தத்தரூபமாக்க் காட்டிய ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய குரு பாரதிராஜாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாகப் பத்திரிகைகள் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றிகள். இந்தப் படத்தையும் என் பாத்திரத்தையும் உலக அரங்குக்குக் கொண்டுபோனவர்கள் அவர்கள்தான் என்றார்.
பிரியாமணிக்கு முன் தமிழில் இதுவரை 4 நடிகைகள் தேசிய விருதை வென்றுள்ளனர். 1977ல் லட்சுமி (படம்-சில நேரங்களில் சில மனிதர்கள்), 1980ல் ஷோபா (பசி), 1986ல் சுகாசினி (சிந்து பைரவி), 1988ல் அர்ச்சனா (வீடு) ஆகியோர்.


Click it and Unblock the Notifications











