நானா ராசியில்லாதவள்? - சந்திரபாபு நாயுடு மீது ரோஜா பாய்ச்சல்!

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் ரோஜா. பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் சேருவதாக அறிவித்த அடுத்த நாளே ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். இதனால் ரோஜாவை ராசியில்லாதவர் என சந்திரபாபு நாயுடு கிண்டலடித்தார்.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் யாத்திரை நடத்தினார். இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவிலேயே தலை சிறந்த இளம் அரசியல் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார்.
இதுநாள் வரை அரசியல் தலைவருக்காக உயிர் இழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது வாரிசுகள் நேரில் சென்று ஆறுதல் கூறியதில்லை.
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தைக்காக உயிரிந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், தனது சொந்த பணத்தை வாரி வழங்குகிறார். இதனால்தான் எனக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, நான் அக்கட்சியில் இருந்தபோது சந்திரகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருந்ததால் தோற்றேன்.
ஆனால் சந்திரபாபு உள்ளிட்ட தெலுங்கு தேசம் தலைவர்கள் என்னை 'ராசி இல்லாதவள்' என்று முத்திரை குத்தினார்கள். சந்திரபாபு நாயுடு மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்றால் அடுத்த தேர்தலில் இதே சந்திரகிரி தொகுதியில் போட்டியிடத் தயாரா?
தெலுங்கு தேசம் தலைவர்கள் எனக்கு எதிராக செய்து வரும் பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் அவர்களை பற்றிய ரகசியங்களை எல்லாம் வெளியிட வேண்டியிருக்கும்", என்றார்.


Click it and Unblock the Notifications











