கொய்னாவுக்கு ரூ. 50 லட்சம் தந்த கோடா!?

மது கோடாவின் ஊழல் வலையில் ஏகப்பட்ட பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கோடாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை கொய்னா மித்ராவும், இப்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக பிராண்ட் அம்பாசடராக அறிவிக்கப்பட்டவர் கொய்னா மித்ரா. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்காக கொய்னாவுக்கு அப்போதைய முதல்வர் மது கோடா பெருமளவில் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக பிரசாரம் செய்வதற்காக ரூ. 50 லட்சம் பணம் வாங்கினார் கொய்னா என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை கொய்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து கொய்னா கூறுகையில், இதெல்லாம் பொய்யான புகார்கள். உண்மையில் அவ்வளவு பெரிய தொகையை நான் மது கோடாவிடமிருந்து பெறவில்லை.
எந்தவித கட்டணமும் பெறாமல்தான் அந்த சேவையை நான் செய்தேன். இருப்பினும் ஒரு அடையாளத்திற்காக ரூ. 3 லட்சமும், பின்னர் ரூ. 11,000 மற்றும் ஒரு சால்வை, சாக்லேட்டுகள், பூக்களை மட்டுமே கோடாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
மேலும், அவர்களிடமிருந்து முதல் வகுப்பு வசதிகளையும் பெற்றேன். ஆனால் ரூ. 50 லட்சம் பணமெல்லாம் வாங்கவில்லை என்கிறார் கொய்னா.


Click it and Unblock the Notifications











