ரஜினியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்-ஐஸ்வர்யா ராய்

ஷங்கரின் மெகா படமான ரோபோவில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராய். திடீரென ஐஸ்வர்யா படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்தார் ஐஸ்வர்யா. தான் ரோபோவில் நடிப்பது உறுதி, விலகவில்லை என்று விளக்கினார்.
ஆனால் கடந்த 2 நாட்களாக மறுபடியும் ஐஸ்வர்யா ராய் படத்தில் இருப்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி மும்பை இதழ் ஒன்று செய்தி வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ரோபோட்டை 2 ஆண்டுகள் வரை படம் பிடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ஐஸ்வர்யா ராய்க்குப் பதில் தீபிகா படுகோனே நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டு வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதை ஐஸ்வர்யா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். அவர் மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. அவரைப் பாராட்டாதவர்களே கிடையாது.
எனக்கும் அந்த அனுபவம் கிடைக்கப் போகிறது. அதற்காக காத்திருக்கிறேன். ரோபோட், முற்றிலும் ரஜினி, ஷங்கர் ஸ்டைல் படமாக இருக்கும். சிறந்த பொழுது போக்குப் படமாகவும் அமையும்.
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக்காகவே இப்படத்தை நான் ஒத்துக் கொண்டேன். இருவரும் தங்களது பல படங்களுக்கு முன்பு என்னை அழைத்தபோது என்னால் நடிக்க முடியவில்லை. அது சங்கடமாக இருக்கிறது.
தனது நான்கு படங்களுக்கு ரஜினி என்னை அணுகினார். ஒவ்வொரு முறையும், நான் மறுத்தபோதும், அதை மனதில் வைத்துக் கொள்ளாமல், எந்தவித ஈகோவும் இல்லாமல் மீண்டும் மீண்டும் என்னை அணுகினார். அவர் ஒருபோதும் என்னைத் தவறாக நினைத்ததில்லை. அவர் மிகவும் நாகரீகமானவர். அவருடைய அனுபவத்தையும், முதிர்ச்சியையும் அது காட்டுகிறது.
எனவே சந்தேகமே இல்லாமல் ரோபோட்டில் நான் நடிக்கிறேன். ரஜினியுடன் இப்படத்தில் நான் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











