வேலு - பாக்யாஞ்சலி இருவருமே பொய் புகார் கொடுத்துள்ளனர்! - அரசு வக்கீல்
வில்லன் நடிகர் வேலு, நடிகை பாக்யாஞ்சலி இருவரின் புகாரிலும் உண்மை இல்லை. பொய் புகார் கொடுத்து பரபரப்பைக் கிளப்பி வருகின்றனர், என்று அரசு வக்கீல் ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கேரளாவை சேர்ந்த நடிகை பாக்யாஞ்சலி தன்னுடன் நடித்த வில்லன் நடிகர் தன்னை திருமணம் செய்யும்படியும், காதலிக்கும்படியும் வற்புறுத்துவதாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் போன் மூலமாகவும் செக்ஸ் தொல்லை கொடுத்து மிரட்டுவதாகவும் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து நடிகர் வேலுவிடம் வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க வேலு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
இதைத்தொடர்ந்து நடிகை பாக்யாஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் வேலுவுக்கு எதிராக தான் கொடுத்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
மேலும் நடிகர் வேலு தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே வேலுவும், பாக்யாஞ்சலி மீது நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். அதில், பாக்யாஞ்சலி தரப்பில் இருந்து தனக்கு இன்டர்நெட் மற்றும் செல்போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வேப்பேரி போலீசில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இவர்கள் 2 பேரும் தாக்கல் செய்த 2 மனுக்களும் நீதிபதி அக்பர்அலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜின்னா ஆஜராகி வாதாடினார்.
'பொய் புகார்... நேரம் வீண்!'
"மனுதாரர்கள் இருவரும் மாறி மாறி பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அது போலீஸ் விசாரணையில் தெளிவாகவே தெரியவந்துள்ளது. இவர்களுக்குள் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. அதுவும் ஒரு சிறிய தொகைதான். மேலும் இது ஒரு சிவில் பிரச்சினை. அதில் போலீசார் தலையிட முடியாது. எனவே இவர்களின் புகார் மனுக்களை போலீசாரே விசாரித்து முடித்து வைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பிரச்சினையை கிளப்புகிறார்கள். கோர்ட் நேரத்தை வீணடிக்கிறார்கள்," என்றார்.
அப்போது நடிகர் வேலு தரப்பு வக்கீல் லிங்கேஸ்வரன் குறுக்கிட்டு வாதாடினார். அவர் கூறும்போது, "வேலுவை டெலிபோன் மூலம் மிரட்டியதற்கான செல்போன் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இது பொய் புகார் அல்ல" என்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இன்று மாலைக்கு நீதிபதி அக்பர்அலி தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications