மாயமாகும் 'குத்து விளக்குகள்'

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் பரிமாணம் காலத்துக்கேற்றபடி மாறிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்பு இருந்த ஹீரோயின்களின் நிலை இப்போது இல்லை.
கவர்ச்சிதான் இப்போதைய மூலதனமாகி விட்டது. திறமை மட்டும் போதாது, கவர்ச்சியும் தூக்கலாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஹீரோயின்கள் பெரும்பாலானோர் வந்து விட்டனர்.
விளைவு, குடும்பப் பாங்கான, குத்து விளக்கு போன்ற மங்களரமான நடிகைகளுக்கு பெரும் பஞ்சமாகி விட்டது.
ஐயா படம் வந்தபோது நயனதாரா அனைவரையும் கவர்ந்திழுத்தார்- கவர்ச்சியால் அல்ல, அழகிய குடும்பப் பாங்கான முகத்தால்.
ஆனால் சந்திரமுகியோடு அவர் குடும்பப் பாங்குக்கு குட்பை சொல்லி விட்டார். பில்லாவில் அவரது கவர்ச்சி விஸ்வரூபம் எடுத்து ஆடியது. தொடர்ந்து ஏகனிலும் கவர்ச்சி களேபரம்தான்.
அதேபோலத்தான் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை, தாவணியில் பாங்காக வந்து போன மீனாட்சி, இப்போது குத்துப் பாட்டுக் களத்தில் குதித்துள்ளார். கருப்பசாமியில் பார்த்த மீனாட்சிக்கும், இப்போது குத்துப் பாட்டுக்குத் தயாராகி விட்ட மீனாட்சிக்கும் மலை அளவு வித்தியாசம்.
அவரா, இவர் என்று ஆச்சரியப்பட்டுப் போகும் வகையில் படு கவர்ச்சிகரமாக காணப்படுகிறார் மீனாட்சி.
அவரது முக லட்சணத்தைப் பார்த்துத்தான் கருப்பசாமி படத்தில் மீனாட்சி என்ற பெயரை சூட்டினார்கள். அவரது உண்மையான பெயர் பிங்கி சர்க்கார் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.
தற்போது கிளாமர் களத்தில் குதித்து விட்டதால் விரைவில் மீனாட்சி என்ற பெயரைத் துறக்கவும் அவர் முடிவு செய்து விட்டாராம்.
தமிழ் சினிமாவில் இப்போது கிளாமர் காட்டினால்தான் ஹீரோயின்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது. தமிழ் சினிமாவிலேயே லட்சணமான முகவும், வசீகர புன்னகையும், நம்ம வீட்டுப் பெண் என்று சந்தோஷிக்கும் வகையில் இருந்த ஒரே ஹீரோயின் சினேகா மட்டும்தான். அவரும் கூட பாண்டி படத்தில் ஆடிய கவர்ச்சி கதகளி, சினேகாவையும், கவர்ச்சி தீண்டி விட்டதையே காட்டியது.
இப்படி ஹீரோயின்கள் அத்தனை பேரும் கவர்ச்சிக்கு தாவி வருவதால் குத்து விளக்கு நடிகைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
அதுவும் சரி, அன்று சாவித்ரி ரேஞ்சுக்கு நடிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் இது நமீதா காலமாச்சே, அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா!


Click it and Unblock the Notifications











