மிருதுளா போய் தென்றல்!

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன் தமிழ். இவர் இப்போது நடிகராகி விட்டார். அதிலும் ஹீரோவாகி விட்டார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் ஐம்புலன்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் மிருதுளா. கேரள தேசத்தின் தேஜஸான நாயகி. படு க்யூட்டாக இருக்கும் மிருதுளா இப்போது செம டல்லாகியுள்ளார். காரணம், ஐம்புலன் படத்தில் அவர் இல்லை.
என்னாச்சு என்று மிருதுளாவிடம் கேட்டபோது ஏமாத்திட்டாங்க சார் என்று புலம்பித் தள்ளி விட்டார். அமர வைத்து ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி நடந்ததைக் கேட்டபோது மிருதுளா கொட்டியதாவது;
ஒரு வருடத்திற்கு முன்பே இந்தப் படத்தைத் தொடங்கி விட்டனர். மூன்று மாதம் இப்படத்துக்காக கால்ஷீட் கொடுத்திருந்தேன். 15 நாள் ஷூட்டிங் நடந்தது. ஒரு சாதாரண ஹோட்டலில்தான் என்னை தங்கவைத்தனர். நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. சாப்பாடும் சரியில்லை. அதையும் பொறுத்துக் கொண்டேன்.
ஆனால் 15 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நடைபெறவில்லை. கேட்டதற்கு சரியான பதிலும் இல்லை. இப்படியே மூன்று மாதங்கள் ஆகி விட்டது. எனது கால்ஷீட்டும் முடிந்து விட்டது. இதனால் நான் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நிலையில் திடீரென போன் செய்து ஈரோட்டில் ஷூட்டிங் வைத்திருக்கிறோம், தவறாமல் வந்து விடுங்கள் என்றார்கள். சரி என்று நானும், எனது தாயாரும் கைக்காசை செலவழித்து ஈரோட்டுக்குப் போனோம்.
ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் யாருமே இல்லை. எதற்காக எங்களை ஈரோட்டுக்கு வர வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஆனால் நான் சம்பளம் அதிகம் கேட்டதாகவும், இதனால் படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார் இயக்குநர் சந்திரா குரு என்கிறார் மிருதுளா.
இப்போது மிருதுளா இடத்தில் தென்றல் என்ற புதுமுகம் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











