ஸ்ரீவித்யாவாக சந்தியா

'நான் அவன் இல்லை'க்குப் பிறகு மீண்டும் தனது குரு பாலச்சந்தரின் புகழ்பெற்ற படம் ஒன்றை ரீமேக் செய்யப் போகிறார் இயக்குநர் செல்வா.
ஸ்ரீவித்யா- ஜெய்சங்கர் நடித்த வெற்றிப் படம் நூற்றுக்கு நூறுதான் அந்தப் படம்.
இந்தப் படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா நடித்த பாத்திரத்தில் நடிக்கிறார் சந்தியா. படத்திலும் அவருக்கு வித்யா என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இது குறித்து சந்தியா கூறுகையில்,
இந்தப் படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அசத்தலான படம். அருமையான கதை. செல்வா சார் எடுத்த நான் அவன் இல்லை படத்தையும் பார்த்திருக்கிறேன். பழைய படத்துக்கு இத்தனை அழகிய வண்ணம் தர முடியுமா என்று வியந்து போனேன்.
நூற்றுக்கு நூறு படத்தையும் இப்போதைய சூழலுக்கு ஏற்ப நவீனமாகத் தருவார் செல்வா என்று தெரியும். அதனால்தான் வேறு எதைப் பற்றியும் பேசாமல் இந்தப் படத்துக்கு ஒப்புக் கொண்டேன்.
ஸ்ரீவித்யா அளவுக்கு என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் நிஜமாகவே மிகச் சிறந்த பெண்மணி. ஆனால் அவர் பெயரைக் கெடுக்காமல் நடிப்பேன்.
இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் கதை சாதாரணமாகத் தெரியும். ஆனால் க்ளைமாக்ஸ், காதல் படம் மாதிரி அழுத்தமானது, அதிர வைக்கும். நான் அனுபவித்த அந்த அதிர்ச்சியை படம் வந்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.
மற்றொரு படம் மஞ்சள் வெயில் படம் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











