ஸ்னேகா 50, நாட் அவுட்!

ஆனந்தம் படத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் பாட்டுக்குத் தோன்றினார். அந்த ஒற்றை ரூபாய் அவரை கோடிகளில் புரள வைத்துவிட்டது. இந்தப் படத்துக்கு முன்பே பாசிலின் மலையாளப் படம் ஒன்றில் நடித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை.
அழகிய கண்கள், அதைவிட அழகான புன்னகை என படத்துக்குப் படம் குடும்பப்பாங்கான தோற்றத்தில் தோன்றி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடிவந்துவிட்ட தெலுங்கு தேச அழகி ஸ்னேகா. காலத்தின் மாற்றத்துக்கேற்ப கவர்ச்சி வேடத்திலும் அவ்வப்போது கலக்கியதால் தொடர்ந்து பட வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது இவரால்.
ரஜினியைத் தவிர கிட்டத்தட்ட மற்ற எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டுவிட்ட ஸ்னேகாவுக்கு, ரஜினியுடன் நடிக்காதது பெரும் குறையாகவே இருந்தது. சந்திரமுகியில் முதலில் சினேகாவை நடிக்க வைக்கும் திட்டமிருந்தாலும், பின்னர் அந்த வாய்ப்பு நயன்தாராவுக்குப் போய்விட்டது.
ஆனால் அவரது ஏக்கத்தைப் போக்கும் விதமாக, இயக்குநர் பி.வாசு, தனது அடுத்த படமான குசேலனில் ரஜினியுடன் ஸ்னேகாவை நடிக்க வைத்துள்ளார். சில காட்சிகள்தான் என்றாலும், ரஜினி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு நல்ல வேடம் அது என புளகாங்கிதப்படுகிறார் ஸ்னேகா.
இப்போது மம்முட்டியுடன் இரு படங்கள், பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட 5 படங்களில் நடித்துவரும் சினேகாவுக்கு இன்னும் இரு நிறைவேறாத ஆசைகள் உள்ளனவாம்.
ஒரு படத்திலாவது மோகன்லாலுடன் நடிக்கணும்னு ஆசை. அதே மாதிரி மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை. அவ்ளோதான். என்னோட இந்த சின்ன ஆசை மணிரத்னம் சாரோட அடுத்த படத்திலாவது நிறைவேறினால் சந்தோஷம்தான். மற்றபடி என்னுடைய இந்த 7 வருட கேரியர் ரொம்பரொம்ப சந்தோஷமா இருந்தது. இனியும் அது தொடரும்னு நம்புகிறேன், என்ற ஸ்னேகாவிடம், அடுத்து ப்ரமோஷன் எப்போது என்றோம்.
அதாங்க கல்யாணம்...
அதுக்கென்ன அவசரம்... இன்னும் வயசிருக்கு, நடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கு என்கிறார் தன் வழக்கமான புன்னகையுடன்.
அது சரி...!


Click it and Unblock the Notifications











