மேனேஜரின் 'சுருட்டு' - மாளவிகா புகார்!

நாயகியாக, பின்னர் கவர்ச்சி நடிகையாக, அதன் பின்னர் குத்தாட்ட நாயகியாக கலக்கி வந்த மாளவிகா, சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கர்ப்பமடைந்தார்.
கர்ப்பமடைவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட இந்திர விழா படத்தில் குத்துப்பாட்டு இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டார்.
தற்போது மும்பையில் கணவர் வீட்டில் தங்கியிருக்கும் மாளவிகா தனது மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.
அதில், எனது சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து முனுசாமிதான் வாங்கித் தருவார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் தந்த பணத்தை என்னிடம் முழுமையாக கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் என்று கூறியுள்ளார் மாளவிகா.
மாளவிகாவின் கால்ஷீட் மேனேஜராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் முனுசாமி. அவரது கால்ஷீட் மற்றும் சம்பளம் உள்ளிட்டவற்றை முனுசாமிதான் டீல் செய்வார். இந்த வேலைக்காக, மாளவிகா, முனுசாமிக்கு ஒரு படத்திற்கு, தனது சம்பளத்தில் 7 சதவீதத்தை கமிஷனாக கொடுப்பார்.
ஆனால் கமிஷன் தொகையை விட மிகப் பெரும் தொகையை தனக்குத் தெரியாமல் முனுசாமி பதுக்கி விட்டதாக புகார் கூறியுள்ளார் மாளவிகா.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், எங்களது ஒப்பந்தப்படி ஒரு படத்திற்குரிய சம்பளத்தில் 7 சதவீதத்தைத் தான் கமிஷனாக தர வேண்டும். சிங்கக்குட்டி படத்திற்கு எனக்கு ரூ. 4 லட்சம் சம்பளத்தை அதன் தயாரிப்பாளர் முனுசாமியிடம் தந்திருக்கிறார். ஆனால் அதில் ரூ. 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு 3 லட்சத்தைத்தான் முனுசாமி என்னிடம் தந்தார்.
சிங்கக்குட்டி படத் தயாரிப்பாளர் என்னுடன் போனில் பேசியபோதுதான் இது தெரிய வந்தது. இதுகுறித்து முனுசாமியிடம் கேட்டதற்கு என்னை அவர் தொலைத்துக் கட்டி விடுவதாக மிரட்டுகிறார்.
உடனடியாக முனுசாமியை அழைத்து விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தயாரிப்பாளர்கள் எனக்குத் தந்த சம்பளப் பணத்தில் அவர் மோசடி செய்த தொகையை திரும்ப வாங்கித் தர வேண்டும் என்று கோரியுள்ளார் மாளவிகா.
தற்போது மாளவிகா 5 மாத கர்ப்பமாக உள்ளார். தமிழில் குருவிதான் அவர் கடைசியாக நடித்த படம். 3 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் சினிமாவுக்கு வரவுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளார் மாளவிகா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











