நமீதாவுக்கு முத்துக் குளிக்க பயிற்சி!

மாயாஜால மன்னன் எனப் புகழப்பட்ட விட்டலாச்சார்யா தயாரித்து இயக்கி தமிழ் தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ஜகன் மோகினி. அன்றைய கவர்ச்சிப்புயல் ஜெயமாலினி தன் அதிரடி குத்தாட்டத்தால் இளசுகளை (இன்றைய பெருசுகளை) கதிகலங்க வைத்த படம்.
இந்தப் படத்தை எச்.முரளி ரீமேக் செய்து வருகிறார். என்.கே.விஸ்வநாதன் இயக்குகிறார்.
ஜெயமாலினி கலக்கிய ஜெகன் மோகினி வேடத்தில் இன்றைய நவீன ஜெயமாலினியான நமீதா நடிக்கிறார். இன்னொரு கவர்ச்சி நாயகி நிலாவும் நடிக்கிறார் (கதைப்படி இவர்தான் நாயகி).
பழைய ஜெகன் மோகினியில் ஜெயமாலினி ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்திருப்பார். ரீமேக்கில் அப்படி எடுத்தால் எடுபடாது, நமீதாவின் முழு அழகையும் காட்ட முடியாது என்பதால், இதில் கடலில் முத்துக் குளிக்கும் பெண்ணாக அவரை மாற்றி விட்டிருக்கிறார் இயக்குநர் (படம் முழுக்க குளித்துக் கொண்டே இருப்பாரோ?).
படத்தின் கதைப்படி கடற் கொள்ளையர்களைப் பிடிக்க ஒரு கடலோர கிராமத்துக்கு வருகிறார் அந்நாட்டு இளவரசர். அப்போது கொள்ளையர்களை விட்டு விட்டு முத்து குளித்துக் கொண்டிருக்கும் நமீதாவிடம் மனதைக் கோட்டை விடுகிறார்.
ஆசை தீரக் காதலிக்கும் இளவரசன், நமீதாவை கந்தர்வ கல்யாணம் செய்து கொள்ள, இதைக் கேள்விப்பட்ட மன்னன் தன் வீரர்களை அனுப்பி நமீதாவைக் கொன்றுவிடுகிறார்.
பின்னர் மகனுக்கு நிலாவைத் திருமணம் செய்து வைக்க முயல, நமீதா, ஜெகன் மோகினியாக வந்து திருமணத்தை நிறுத்தி, ஜெகஜ்ஜால வேலைகள் காட்டுவதாகப் போகிறது படம்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரை, தேனியில் முடிந்து விட்டது. பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்டு விட்டன. இன்னும் நமீதா கடலில் முத்துக்குளிக்கும் காட்சிகளும், கிராபிக்ஸ் வேலைகளும்தான் பாக்கியாம்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை தீபாவளிக்கு முன்பாகவே ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் தயாரிப்பாளர் முரளி.
முத்துக் குளிக்கும் காட்சியில் முதலில் டூப் போட்டு விடலாமா என்று யோசித்தார்களாம். ஆனால் நமீதா தானே 'குளிக்க' முன் வந்ததால் இரட்டிப்பு சந்தோஷமடைந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், இதற்கென விசேஷ பயிற்சி அளிக்க ஒரு நிபுணரை நியமித்துள்ளனர்.
இதுகுறித்து நமீதா கூறுகையில், ஜகன் மோகினி படம் பார்த்தேன். ஜெயமாலினி அற்புதமாக செய்திருந்தார். அந்த வேடத்தில் நான் நடிப்பது பெருமையா இருக்கு... நிச்சயம் எனக்கு இது ஒரு பெரிய வெற்றிப் படம்... முத்துக் குளிக்கும் காட்சியில் நடிக்க இப்போ ட்ரெயினிங் போய்ட்டிருக்கு... என்கிறார்.


Click it and Unblock the Notifications