'சுப்பிரமணியபுரம்' ஸ்வாதிக்கு தமிழ் பேச ஆசை!
கண்களாலும், ரோஜா இதழ் சிரிப்பாலும், தமிழ் திரை ரசிகர்களை வசீகரித்த ஸ்வாதி விரைவில் மீண்டும் தமிழ்த் திரை ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்ய வரப் போகிறார். விக்ரமுடன் நடிக்க இவரைப் பேசி வருகிறார்களாம்.
சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழுக்கு வந்த நடிகை ஸ்வாதி. ஆந்திரத்து நடிகையாக இருந்தாலும், சுப்பிரமணியபுரம் படத்தில் மதுரைக்கார பெண்ணாக வந்து அசத்தியிருந்தார். அதிகம் பேசாமல் கண்களாலும், அழகான சிரிப்பாலும் அனைவரையும் வசீகரித்த ஸ்வாதி இப்போது தமிழில் காணவில்லை.
சமீபத்தில் வெளியாகி விரைவிலேயே தோல்விப் பட வரிசையில் இணைந்த கனிமொழி படத்தில் ஒரு சின்ன ரோலில் கெஸ்ட் ஆக தலையைக் காட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சில தமிழ்ப் பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளதாம். விக்ரமுடன் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏன் இப்படி இவ்வளவு பெரிய இடைவெளி என்று ஸ்வாதியிடம்கேட்டால், என்ன செய்வது, எனக்கு தமிழில் நிறைய நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நல்ல கதை கிடைக்கவில்லை. தற்போது விக்ரமுடன் நடிக்க பேசி வருகிறார்கள். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழிலும் நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் ஸ்வாதி.
அப்புறம் இன்னொரு விஷயத்தையும் சொன்னார் ஸ்வாதி. தெலுங்கில் நானேதான் டப்பிங்கும் பேசுகிறேன். தமிழில் மட்டும் பேச முடியவில்லை, தமிழ் தெரியாததே அதற்குக் காரணம். ஆனால் இப்போது தமிழ் கற்க ஆரம்பித்து விட்டேன். விரைவில் எனக்கு நானே பேசிக் கொள்வேன் என்கிறார் தனது தெத்துப் பல் தெரிய சிரித்தபடி.


Click it and Unblock the Notifications











