மீண்டும் நடிக்கிறார் லலிதகுமாரி

கே.பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் லலித குமாரி. பழம்பெரும் நடிகர் ஆனந்தன் இவரது தந்தை, டிஸ்கோ சாந்தி இவரது சகோதரி.
பின்னர் பிரகாஷ் ராஜை காதலித்து மணந்து கொண்டார் லலிதா குமாரி. அருமையாக நடந்து வந்த காதல் வாழ்க்கையில் திடீரென சலசலப்பு தோன்றியது சில ஆண்டுகளுக்கு முன்பு.
சமீபத்தில் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை நாடினார் பிரகாஷ் ராஜ். ஆனால் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வந்தார் லலித குமாரி. பல்வேறு நபர்கள் மூலமாக பிரகாஷ்ராஜை சமாதானப்படுததவும் முயன்றார். ஆனால் பிரகாஷ் ராஜ் மனம் மாறவில்லை.
இந்த நிலையில் அவரும் தற்போது விவாகரத்துக்கு சம்மதித்து விட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் நடிக்கப் போகிறார் லலித குமாரி.
தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடி நடிகையாக மறுபடியும் நடிக்கிறார் லலித குமாரி.
பாலச்சந்தர் தயாரிக்க, செல்வா இயக்கும் அப்படத்திற்கு முறியடி என பெயரிட்டுள்ளனர். அப்படத்தில் காமெடி நடிகையாக நடிக்கிறாராம் லலிதகுமாரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலச்சந்தரின் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருவது மகிழச்சி தருகிறது.
தமிழில் தற்போது நகைச்சுவை நடிகைகளுக்குப் பஞ்சம் உள்ளது. மனோரமா, கோவை சரளா வரிசையில் நானும் சிறந்த காமெடி நடிகையாக இடம் பெறுவேன் என்றார்.
நம்பிக்கையுடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்குங்கள் லலிதகுமாரி..


Click it and Unblock the Notifications











