தெலுங்கு நடிகை பார்கவி கொலையில் மர்மம்-கத்தியால் குத்தியது யார்?

குண்டூர் மாவட்டம் கோரன்வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி. ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, நாயகியாக மாறி தற்போது பிரபல வளரும் நடிகையாக நடித்து வந்தார்.
இவர் நடித்த ஹாலிடேஸ் என்ற படம் ஹிட் ஆகவே, பிரபல நடிகைகள் வரிசையில் இணைந்தார்.
ஹைதராபாத்தில், தனது தாயாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.
இவரும், மேடைப் பாடகரான புஜ்ஜி என்கிற பிரவீனும் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதலை பார்கவியின் தாயார் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று காலையில் பார்கவிக்கு சினிமா ஷூட்டிங் இருந்தது. அவரை படப்பிடிப்புக்கு அழைப்பதற்காக உதவி இயக்குனர்கள் அவருக்கு போன் செய்தனர். ஆனால் போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் படத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணாவிடம் தெரிவித்தனர்.
அவரும் உதவியாளர்களும் பார்கவி வீட்டுக்கு சென்றனர். பின்னர் கதவை உடைத்து பார்த்த போது பார்கவியும், பிரவீனும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பார்கவி காணப்பட்டார். அவரது அருகில் விஷம் குடித்துத்து தற்கொலை செய்து கொண்ட பிரவீனின் உடலும் காணப்பட்டது.
பார்கவியின் உடலில் 8 இடங்களில் கத்திக் குத்து காணப்பட்டது. அவரது சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், நான்தான் பார்கவியின் கணவர். கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்.
எனது முதல் மனைவி குண்டூர் முன்னாள் டி.எஸ்.பியின் மகள். பின்னர் சுவப்ணா என்பவரை 2வதாக திருமணம் செய்தேன். அதன் பிறகு பார்கவியை காதலித்து அவரை 3வதாக திருமணம் செய்து கொண்டேன்.
என்னை பார்கவியின் கணவராக ஏற்க வேண்டும் என்றால் சுவப்ணா பெயரில் உள்ள வீட்டை தனது மகள் பார்கவி பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என பார்கவியின் தாயார் வலியுறுத்தி வந்தார்.
ஆரம்பத்தில் பிரபலமடையாமல் இருந்த பார்கவி பின்னர் பிரபல நடிகையாக மாறத் தொடங்கியதால் என்னை விட்டு விலகத் தொடங்கினார். கை நிறையப் படங்கள் வந்ததால், அவருக்கு என் மீதான மோகம் குறைந்தது. பார்ப்பவர்களிடம் எல்லாம் என்னைக் கணவர் என்று கூறாமல், தாய்மாமா என்று அறிமுகப்படுத்தினார்.
இதனால் பார்கவி என்னை விட்டு எப்படியும் பிரிந்து விடுவார் என்பதை உணர்ந்தேன். இதனால்தான் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து பார்கவியை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்கிறேன் என்று கூறியிருந்தார் பிரவீன்.
யார் குத்தியது?:
இங்குதான் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சயனைடு கொடுத்து பார்கவியை கொல்ல திட்டமிட்ட பிரவீன் எதற்காக அவரைக் கத்தியால் குத்த வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
பார்கவியின் விலாபகுதியில் ஒரு ஆழமான கத்திக்குத்தும், முதுகில் ஆழமான கத்திக்குத்தும் இருந்தது. மற்ற 6 இடங்களில் லேசான கத்திக்குத்து இருந்தது.
கொலை நடக்கும் முன்பு அந்த கடிதத்தை பிரவீன் எழுதினாரா? அதில் இருப்பது அவரது கையெழுத்து தானா என்பதில் சந்தேகம் உள்ளது.
பார்கவி கடந்த 2 மாதங்களாகத்தான் இந்த குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள காவலாளியிடம் போலீசார் விசாரித்த போது பிரவீனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று கூறினார். கொலை நடந்த அன்று பிரவீன் எப்படி அங்கு வந்தார் என்பதும் தனக்கு தெரியாது என்றார்.
அவரது பேச்சு தெளிவாக இல்லை.
மேலும், பார்கவியின் சகோதரர் போலீசாரிடம் கூறுகையில், பிரவீன் கல்லூரி பருவத்தில் இருந்தே பெண்கள் விஷயத்தில் மோசமானவன். அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு.
ஆனால் அவன் கொலை செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவன் அல்ல. தற்கொலை செய்யும் அளவுக்கு கோழையும் அல்ல என்றார்.
எனவே பிரவீன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு யாரோ சிலர் இதில் தொடர்புப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட போது பார்கவி உயிர் தப்பிக்க கடுமையாக போராடியுள்ளார். கத்தி கூச்சலும் போட்டுள்ளார். அவரது வீட்டு பொருட்களும் அலங்கோலமாக சிதறி கிடக்கின்றன.
எனவே அந்த சப்தம் அக்கம் பக்கத்தினருக்கு கண்டிப்பாக கேட்டிருக்கும். ஆனால் யாருக்கும் தெரியவில்லை என்று ஏன் கூறுகிறார்கள் என்று போலீஸாருக்கு குழப்பமாக உள்ளது.
பார்கவி மற்றும் பிரவீன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரவீன் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதமும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இரண்டின் சோதனை முடிவும் தெரிய வந்தால்தான் பார்கவி கொலை வழக்கில் உள்ள மர்மம் விலகலாம் என போலீஸார் நம்புகின்றனர்.
தற்போது பார்கவி 10 படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். அத்தனை படங்களும் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டி விட்டன. இந்த நிலையில் பார்கவி கொல்லப்பட்டு விட்டதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











