twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகனை ஆசின் கடத்தி விட்டார்-உதவியாளரின் தாய் பரபரப்பு புகார்

    By Staff
    |

    Asin with Ajith
    ஆசினிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்த தனது மகனைக் காணவில்லை. ஆசினின் அனைத்து ரகசியங்களும் தனது மகனுக்குத் தெரியும் என்பதால் கேரளாவில் உள்ள தனது வீட்டிலோ அல்லது வேறு எங்கேயோ அவரை கடத்தி வைத்துள்ளனர் ஆசினும், அவரது தந்தையும். அவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி பெண்மணி ஒருவர் சென்னை புறநகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்த ஆசின் தற்போது இந்தியிலும் பிரபலமாகி விட்டார். அவர் இந்திக்குப் போயிருந்த சமயத்தில் ஒரு சிக்கலைச் சந்தித்தார்.

    அவரிடம் வீட்டு வேலை பார்த்து வந்த பெண்ணின் தாயார் போலீஸில் புகார் கொடுத்தார். தனது மகளை ஆசின் பிரித்து விட்டார். தன்னுடன் சேர தடையாக இருக்கிறார். அவருக்கு என்ன ஆனதோ என்று தெரியவில்லை. மீட்டுத் தர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை உடனடியாக மறுத்த ஆசின், விசாரணைக்கு சென்னைக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் வரவில்லை. இந்த நிலையில் சிலமாதங்கள் கழித்து வேலைக்காரப் பெண் சென்னைக்கு வந்தார்.

    தன்னை ஆசின் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார் என்று வாக்குமூலம் அளித்தார். ஆசினும் போன் மூலம் போலீஸாரிடம் விளக்கம் அளித்தார். பின்னர் அந்தப் பெண்ணை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

    இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் புதிதாக ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் ஆசின். இந்த முறை அவரது உதவியாளரின் தாயார் மூலம் ஆசினுக்கு பிரச்சினை வந்துள்ளது.

    சென்னை புறநகரான செங்குன்றத்தைச் சேர்ந்த சுடலை வடிவு என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், என் கணவர் முத்துக்கருப்பன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் வேலை பார்த்தவர். அவர் இறந்து விட்டார். எங்கள் மகன் நல்லமுத்துக்குமார் (23). சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.

    போக்கிரி படப்பிடிப்பின் போது அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்லி எனது மகனை உதவியாளர் வேலைக்கு அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளாக அசினிடம் என் மகன் வேலை பார்த்தான்.

    கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் என் மகன் சிக்கினான். அவனது இடது கால் முறிந்தது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து நான் மும்பைக்கு ஓடினேன். அங்கு ஒன்றரை மாதம் மகனோடு தங்கி இருந்தேன்.

    குணமானதும் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு எனது மகனிடம் அசின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு வரும்படி அழைத்தார். என் மகனும் அதை தட்ட முடியாமல் மும்பை சென்றான்.

    அங்கிருந்து தினமும் போனில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினான். திடீரென்று ஒருநாள் இங்கு எனக்கு வேலை பிடிக்கவில்லை. அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்றெல்லாம் திட்டுகிறார் என்று புலம்பி வேதனைப்பட்டான்.

    நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். வேலை பிடிக்காவிட்டால் சென்னைக்கு புறப்பட்டு வந்து விடு என்று கூறினேன். அதன் பிறகு அவனிடமிருந்து போன் வரவில்லை. அவனை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றேன். முடியவில்லை.

    பிறகு எனது சகோதரியை அழைத்துக் கொண்டு மும்பை சென்றேன். மகன் தங்கி இருந்த இடத்துக்கு போய் விசாரித்தேன். அங்கு அறையில் இருந்தவர்கள் நல்லமுத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டது என்றனர்.

    அதிர்ச்சி அடைந்த நான், அசின் கார் டிரைவர் முருகனை தொடர்பு கொண்டேன். அவர் மூலம் அசின் வீட்டுக்கு சென்றேன். படப்பிடிப்புக்கு சென்றதால் பல நாட்கள் அவரை பார்க்க முடியவில்லை.

    மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அசின் தந்தை ஜோசப் பேசினார். உன் மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம் என்றார்.

    இதையடுத்து நான் மும்பையில் தங்கி இருந்து என் மகனை தேடினேன். இந் நிலையில், நான் தங்கி இருந்த இடத்துக்கு ஜோசப் வந்தார். என் மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டதாக கூறினார்.

    ஆனால் அதை நான் நம்பவில்லை. மும்பை போலீசில் புகார் அளிக்கப் போவதாக சொன்னேன். அவர் தடுத்தார். நீ சென்னைக்கு போ உன் மகனை தேடி பிடித்து அனுப்பி வைக்கிறேன் என்றார். அதை நம்பி நானும் வந்து விட்டேன்.

    ஆனால் ஜோசப் சொன்னப்படி இதுவரை என் மகனை அனுப்பி வைக்கவில்லை. அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அசினையும் ஜோசப்பையும் நிறைய தடவை தொடர்பு கொண்டேன். அவர்கள் மொபைலை எடுப்பது இல்லை.

    எனவே அசின் மீதும் அவர் தந்தை ஜோசப் மீதும் நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார் சுடலை வடிவு.

    தனது புகார் குறித்து சுடலைவடிவு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    4 வருடங்களுக்கு முன்புதான் அசினிடம் உதவியாளராக எனது மகன் சேர்ந்தான். எங்கு போனாலும் அவனை ஆசின் உடன் அழைத்துப் போவார். வெளிநாட்டு படப்பிடிப்புக்குப் போனபோதும் கூட அழைத்துச் சென்றார்.

    அசின் அன்பாக நடந்து கொள்வதாககூறு வான். எனது மகனின் பிறந்த நாளை கூட அசின் கொண்டாடியுள்ளார். ஆசினைப் பற்றிய அனைத்து அந்தரங்க விஷயங்களும் அவனுக்குத் தெரியும் என்பதால் விடுமுறை கூட கொடுக்காமல் கூடவே வைத்திருந்தார் ஆசின்.

    என்னுடன் மட்டுமே போனில் பேசுவான். மற்ற யாருடனும் அவன் பேச ஆசின் அனுமதிக்க மாட்டார். விபத்தில் சிக்கிய பின்னர் கூட அவனை ஆசின் விடவில்லை. மும்பையிலேயே இரு என்றார். இருப்பினும் சென்னைக்கு வந்து ஒன்றரை மாதம் ஓய்வில் இருந்தான். அப்போதும் கூட விடாமல் போன் செய்து வருமாறு அழைத்தார் ஆசின்.

    இதனால்தான் அவன் எனது பேச்சையும் கேட்காமல் மும்பைக்குப் போனான். ஆனால் அங்கு அவனை முன்பு போல ஆசினும், அவரது தந்தையும் நடத்தவில்லை.

    எனது மகனே எனக்கு போன் செய்து அசின் மற்றும் அவரது தந்தையின் டார்ச்சர் தாங்க முடியவில்லை. கேவலாக நடத்துகிறார்கள். அவர்களை பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்ததால் வெளியிலும் விட மறுக்கிறார்கள் என்று போனில் கதறினான்.

    இந் நிலையில்தான் அவனைக் காணவில்லை. அவனை எங்கேயோ கடத்தி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறேன். கேரளாவில் உள்ள ஆசின் வீட்டில் கூட வைத்திருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    ஆசின் தந்தையின் விளக்கம்:

    இந்த விவகாரம் குறித்து செங்குன்றம் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். முதலில் ஆசினின் தந்தை ஜோசப்பை போன் மூலம் பிடித்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் விசாரணை நடத்தினார்.

    அப்போது ஜோசப் கூறுகையில், முத்துக்குமார் கடந்த 3 வருடமாக அசினுக்கு டச்-அப் பாயாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதியோடு வேலையை விட்டு நிற்பதாக கூறி சம்பளத்தை கணக்கு முடித்து வாங்கிச் சென்று விட்டார். அவர் வீட்டுக்கு செல்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அங்கு செல்லவில்லை என்பதால் அவர் மாயமானதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி போலீசில் புகார் செய்தோம்.

    அதற்குரிய ஆவணங்களை அவரது தாயாரிடம் கொடுத்தனுப்பி விட்டேன். தற்போது அசின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அவரால் பேச முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    டச் அப் பாய்..

    ஆசினிடம் டச் அப் பாயாக இருந்துள்ளார் முத்துக்குமார். டீ போடுவது, டச்-அப் செய்வது என சகலமும் செய்து வந்துள்ளார். அவருக்கு ரூ. 10,000 ஆயிரம் வரை சம்பளமாக கொடுத்துள்ளார் ஆசின்.

    வேலைக்காரப் பெண் சர்ச்சையிலிருந்து மீண்டு இந்தியில் பிசியாகியுள்ள இந்த நேரத்தில் ஆசினைத் தேடி உதவியாளர் ரூபத்தில் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X