மலையாள மாமியார் குஷ்பு!

பொதுவாக தமிழ், தெலுங்கில் உச்சத்திலிருக்கும்போது மலையாளப் பட வாய்ப்புகளை புறக்கணிக்கும் நடிகைகள், வயதான பிறகு மலையாளத்தை தேடிப் போகிறார்கள். அல்லது வருகிற வாய்ப்புகளை கப்பென்று பிடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் குஷ்பு ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர். நல்ல வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில், மலையாளத்தில் மிஸ்டர் மருகன் என்ற புதுப்படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதில் அவருக்கு மாமியார் வேடம். கதைப் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மருமகனாக நடிப்பவர் திலீப்!
இந்த வாய்ப்பு குறித்து குஷ்பு கூறுகையில், "கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.
திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் அந்தக் கதைதான். என்னையே சுற்றி நகரும் திரைக்கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கொஞ்சம் கஷ்டம். அதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











