twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புளோரா நீக்கம்-மன்சூர் டென்ஷன்!

    By Staff
    |

    Flora
    விசா மோசடியில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை புளோராவை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க விசா பெறுவதில் மோசடி செய்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் புளோரா. விஜயகாந்த்தின் கஜேந்திரா, கார்த்திக்கின் குஸ்தி, ஸ்ரீமனுடன் ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் புளோரா.

    இந்த நிலையில் புளோராவை நடிகர் சங்கம் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இதற்கு மன்சூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை புளோராவை அமெரிக்க விசா மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்து சிறையில் அடைத்தது தவறு.

    புளோராவை சொல்லிக் குற்றமில்லை!:

    புளோரா குற்றமற்றவர். யாரோ ஏஜெண்ட் செய்த தவறுக்காக புளோராவை தண்டிப்பது நியாயமல்ல.

    200 பேர் மோசடியில் ஈடுபட்டனர் என்று அமெரிக்க தூதரகம் பூதாகரமான செய்தியை கிளப்பிவிட்டுள்ளது. புளோரா அமெரிக்காவில் திருடவா செய்தார். விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆவணங்களை ஆய்வு செய்து தவறுகளை கண்டுபிடிக்க வேண்டியது தானே.

    புரோக்கர்கள், ஏஜெண்டுகள் செய்த பிழைக்காக நடிகர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது நியாயமல்ல.

    வாடுகிறாரே புளோரா!:

    புளோரா புழல் சிறையில் வாடுகிறார். நடிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நடிகர் சங்கத்துக்கு உண்டு. வக்கீலுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த வக்கீல்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். பாதிப்பு வரும்போது பக்கத்தில் இருந்து உதவத்தான் சங்கங்கள் உள்ளன.

    நாலு வார்த்தை ஆறுதலா ..!:

    புளோராவை நடிகர் சங்கத்தினர் போய் சந்தித்து இருக்க வேண்டும். அவருக்கு ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேசி இருக்க வேண்டும். வக்கீல் ஏற்பாடு செய்து அவரை ஜாமீனில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் அவரை கைவிட்டதுடன் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது.

    சாதாரண நடிகையா புளோரா..?:

    புளோரா சாதாரண நடிகை அல்ல. கஜேந்திரா படத்தில் விஜயகாந்துடன் கதாநாயகியாக நடித்தவர். அவரை விஜயகாந்தும் கைகழுவி விட்டார். நடிகர் சங்கமும் ஒதுக்கி விட்டது. கதாநாயகிக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகர்கள் நிலைமை என்னவாகும்.

    புளோரா தவறே செய்திருந்தாலும் கூட அவரை பாதுகாக்க வேண்டியது நடிகர்களின் கடமை என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

    புளோரா ஜாமீனில் விடுதலை:

    இதற்கிடையே புளோராவை ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அவருடன் மோசடி விசா ஏஜென்ட் வெங்கடரெட்டி காதே, புளோராவின் மேக் அப் உமன் என்ற பெயரில் போலி விசா பெற முயன்ற ஸ்ரீலதா ஆகியோரும் கைதாகினர்.

    புளோராவின் ஜாமீன் மனுவை ஏற்கனவே சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,

    கடந்த 8 ஆண்டுகளாக நான் நடிகையாக உள்ளேன். விசாவுக்காக நான் போலி ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. 1997 முதல் முறைப்படி பெற்ற பாஸ்போர்ட் வைத்துள்ளேன். கலை விழாவுக்காகவும், படப்பிடிப்புக்காகவும் ஏற்கனவே இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, தாய்லாந்து, மொரீசியஸ் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளேன்.

    நான் 17 தெலுங்கு படங்களிலும், 5 கன்னட படங்களிலும், 4 தமிழ் படத்திலும், 2 இந்தி படத்திலும் நடித்துள்ளேன். தற்போது 2 தெலுங்கு படங்களிலும், 2 கன்னட படத்திலும் நடித்து வருகிறேன். தற்போது என்னை கைது செய்திருப்பதால் இந்த படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நான் மாடலாகவும் உள்ளேன்.

    நான் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து வருகிறேன். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1.75 லட்சம் வருமான வரி செலுத்தியுள்ளேன்.

    நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. நான் ஒரு அப்பாவி. என்னை வழக்கில் தவறாக சேர்த்துள்ளனர். ஆகவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதி பாஷா, புளோராவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    ஜாமீன் வழங்குபவர்களில் ஒருவர் புளோராவின் தாயாராக இருக்க வேண்டும், ஜாமீனில் வெளிவந்த பிறகு ஒரு வாரத்திற்கு புளோரா ராயப்பேட்டை போலீசில் தினமும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X