தமிழைத் தள்ளும் பூஜா!

கொக்கி படத்தில் கரணின் காதலியாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இது சொந்தப் பெயர், தமிழில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தார்.
அந்தப் படம் கரணுக்கு கை கொடுத்த அளவுக்கு பூஜாவுக்கு அமையவில்லை. அப்போதுதான் கன்னடத்தில் முங்காரு மலே எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரே படத்தில் கன்னடத்தின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார்.
இப்போது எண்ணுவதற்கு கை விரல்கள் போதாத அளவுக்கு கன்னடப் பட வாய்ப்புகள் குவிகின்றன அவருக்கு.
இடையில் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டவே வேண்டாம் என உதறிவிட்டாராம் அம்மணி.
அது ஏன் தமிழ் மீது இத்தனைக் கோபம்...சமீபத்தில் சென்னை வந்த பூஜாவிடமே கேட்டுவிட்டோம்.
கோபமெல்லாம் ஒண்ணுமில்ல. கிடைச்சிருக்கிற இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாமே என்ற சுய நலம்தான். கொக்கிக்கு அப்புறம் நான் இங்கே வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் கன்னட உலகமோ என்னை இருகரம் நீட்டி வரவேற்றது. இப்போது நிற்கக் கூட நேரமில்லை.
அதற்காக என்னை நம்பர் ஒன் நடிகை என தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லாதவள் நான்.
இப்போதைக்கு தமிழ், தெலுங்கு என எந்த வாய்ப்பையும் ஏற்கும் நிலையில் நானில்லை. யாருடனும் என்னை ஒப்பிடுவதும் எனக்குப் பிடிக்காது. நானே எனக்கு நிகர்.... இது திமிர் அல்ல. என் சுய மரியாதையின் அடையாளம்..." என்றார்.


Click it and Unblock the Notifications











