சுனேனா, தமன்னா...ஜெய் ஆகாஷ் கடுப்பு!

மதன் படத்தில் முதலில் தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் ஜெய் ஆகாஷ். ஆனால் ஒரு ஆண்டுக்கும் மேல் படம் தாமதமானதால், அதிலிருந்து விலகிக் கொண்டார் தமன்னா. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட சுனேனாவும், இப்போது நடிக்கவில்லை என மறுத்துள்ளார்.
இதுகுறித்து மதன் பட நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது இயக்கத்தில் உருவாகும் மதன் படத்தில் சுனேனா 15 நாட்கள் நடித்தார். ஆனால் படத்தில் நடிக்கவில்லை என பொய் சொல்கிறார். படத்தின் துவக்க விழா, அதற்குப் பிந்தைய பிரஸ் மீட்டிலும் கூட அவர் கலந்து கொண்டார்.
ஆனால் இப்போது பொய் கூறியுள்ளதால் அவர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடரப் போகிறேன்.
இதே போல படத்தில் நடிக்க ரூ. 1 லட்சம் அட்வான்ஸ் வாங்கினார் தமன்னா. அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் அவரை நீக்கிவிட்டு புதுமுகம் ராதிகா மேனனை ஒப்பந்தம் செய்தோம். இப்போது அட்வான்சை தர தமன்னா மறுக்கிறார்.
அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த இருவருமே என் படத்தில் நடிக்கத் தொடங்கியபோது புதுமுகங்கள்தான். பெரிய வாய்ப்புகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது. இப்போது கையில் படமிருப்பதால் வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், என்றார்.
இது குறித்து சுனேனாவிடம் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:
மதன் படத்தில் ஒப்பந்தமானது உண்மைதான். ஆனால் ஒரே ஒரு நாள்தான் நடித்தேன். அப்போது ஒரு பாடல் காட்சியை மட்டும்தான் படமாக்கினார்கள். அதன் பின் படம் நின்றுவிட்டது. இதனால் நான் படத்திலிருந்து விலகிவிட்டேன். இதை முறையாகச் சொல்லிவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











