twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புரோட்டா சுட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட விந்தியா

    By Staff
    |

    Vindhya
    கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார் நடிகை விந்தியா.

    கடந்த சட்டசபைத் தேர்தலில் விந்தியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகைகள் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து வருகிற லோக்சபா தேர்தலில் இவர்களில் பலர் பிரசாரத்திற்கு வர விரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டனர்.

    விந்தியாவும் நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்தும் ஒதுங்கியிருந்து வந்தார். இந் நிலையில் மீண்டும் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.

    திருப்பூரில் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து திருப்பூர் நகரை வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்தார் விந்தியா.

    தனது பிரசாரம் குறித்து விந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலத்தில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். 22 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளேன்.

    எனது ஸ்டார் வேல்யூவை வைத்து நான் பிரசாரத்திற்கு வரவில்லை. அதிமுக சிறந்த கட்சி. அதன் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்தே பிரசாரம் செய்கிறேன்.

    விஜயகாந்த் சினிமாவில்தான் கேப்டன். நன்றாக சண்டை போடுவார். ஆனால் அரசியலில் அவர் கேப்டன் இல்லை. இன்னும் பல வருடம் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்னைகளை உணர்ந்து முதல்வர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும். உடனே முதல்வராக வேண்டும் என்றால் ஏற்க முடியாது.

    திருப்பூரில் அதிமுகவுக்கு சாதகமான நிலை உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக கூட செய்தி வந்திருக்கிறது.

    தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த ஊழல்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய உள்ளேன். காங்கிரஸ், பாஜவுக்கு மாற்றாக 3வது அணி ஆட்சி அமைப்பது அவசியம் என்றார் விந்தியா.

    சேலத்தில் புரோட்டா சுட்டு...

    இந் நிலையில் நேற்றிரவு சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் செம்மலைக்கு ஆதரவாக விந்தியா பிரசாரம் செய்தார். அம்மாபேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது அவர் குடை பிடித்துக் கொண்டு வீடு வீடாக சென்று செம்மலைக்கு வாக்கு சேகரித்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர். உடனே விந்தியா அந்த கடைக்குச் சென்று மாவை தட்டி புரோட்டா போட்டார். கடையில் இருந்தவர்களிடம் வாக்கும் சேகரித்தார்.

    அந்த புரோட்டாவை சாப்பிட வாடிக்கையாளர்களிடையே பெரும் போட்டா போட்டி நடந்தது.

    விவாகரத்துக்கு விண்ணப்பித்த விந்தியா...!:

    இதற்கிடையே விந்தியா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளாராம்.

    கடந்த ஆண்டுதான் கோபியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சம்மதிக்காமலிருந்த கோபியின் குடும்பத்தார், பின்னர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.

    கோபி ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர்களது திருமணம் கேரளாவில் நடந்தது.

    திருமணமாகி ஓரு ஆண்டுக்குள் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டுவிட்டதாம் விந்தியாவுக்கு. இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளாரம்.

    இதுகுறித்து விந்தியா தரப்பில் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் பின்னர் பேசுவதாக விந்தியாவின் உதவியாளர் தெரிவித்தார்.

    பானுப்பிரியா குடும்பத்தினர் இதுகுறித்துக் கூறுகையில், வழக்கமாக எல்லா குடும்பங்களிலும் வரும் பிரச்சனைதான். விந்தியா அவசரப்பட்டு விட்டார். எங்களால் முடிந்த அளவு இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயன்றோம். ஆனால் விந்தியா விவாகரத்தில் உறுதியாக இருக்கிறார் என்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X