'சின்ன-பெரிய கதாநாயகன் வித்தியாசம் பார்க்க மாட்டேன்!' - சதா

நான்காண்டுகள் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லை!
தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் அவர் நடித்து வந்ததாகக் கூறப்பட்டாலும், அந்தப் படங்கள் ரிலீசாகினவா, வெற்றி பெற்றனவா என்ற தகவல் ஏதுமில்லை. அது பற்றி சதாவும் ஒன்றும் சொல்லவில்லை.
இப்போது மீண்டும் 'புலி வேஷம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு திரும்பியுள்ளார் சதா, இயக்குநர் பி வாசுவின் ஆதரவோடு. இந்த படத்தில் சதா, ஆர்.கே.ஜோடியாக நடிக்கிறார்.
சென்னை மீனம்பாக்கம் அருகில் ஒரு மாந்தோப்பில் 'புலி வேஷம்' படப்பிடிப்பில் நடந்த பிரஸ் மீட்டில் நிருபர்களைச் சந்தித்தார் சதா.
அவர் கூறுகையில், "சந்திரமுகி படத்துக்காக, பி.வாசு முதலில் என்னைத்தான் கேட்டார். அந்த சமயத்தில் நான் அந்நியன் படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால், சந்திரமுகி படத்துக்கு என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
சந்திரமுகி ரிலீஸ் ஆனபின் அந்த படத்தை பார்த்துவிட்டு, இப்படி ஒரு படத்தில் நம்மால் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று பல நாட்கள் அழுதேன்.
பின்னர் மீண்டும் தன்னுடைய 'ஆப்தரட்சகா' கன்னட படத்துக்காக என்னை கேட்டார் வாசு சார். அப்போது நான் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
மூன்றாவது முறையாக பி.வாசு, புலி வேஷம் படத்துக்காக என்னை அணுகினார். புலி வேஷம், அருமையான கதை. இதில் என் கதாபாத்திரம் புதிரானது. யாராலும் யூகிக்க முடியாத கதாபாத்திரம். அதனால் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று முடிவு செய்து, உடனடியாக கால்ஷீட் கொடுத்தேன்.
இந்த படத்துக்குப்பின், நிறைய தமிழ் படங்களில் என்னைப் பார்ப்பீர்கள்.
அஜீத், விக்ரம் மாதிரி பெரிய கதாநாயகர்களுடன் நடித்த நீங்கள், ஆர்.கே.வுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறீர்களே? என்று சிலர் கேட்கிறார்கள். நான் சின்ன கதாநாயகன், பெரிய கதாநாயகன் என்று வேறுபாடெல்லாம் பார்க்க மாட்டேன். ஏற்கனவே வினய் என்ற புது கதாநாயகனுடன் நடித்தவள்தான் நான்.
இன்றைக்கு புது கதாநாயகனாக இருப்பவர், நாளைக்கே பிரபல கதாநாயகனாக உயர்ந்து விடுவார். அதனால் புதுசு, பழசு என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது...,'' என்றார் சதா.


Click it and Unblock the Notifications











