சிலை தொட்ட வழக்கு-நடிகை ஜெயமாலா ஏப். 4ல் ஆஜராக கேரள நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல சோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவ பிரச்சனம் நடந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் விக்கிரத்தை ஒரு பெண் தொட்டு விட்டதாகவும், இதனால் ஐயப்பனுக்கு சுத்தகிரிகை பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதற்கு மறுநாளே ஐயப்பன் விக்கிரத்தை தொட்டது நான்தான் என்று கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோயில் அதிகாரிகளுக்கு பேக்ஸ் அனுப்பினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையில் ஜெயமாலாவும், உன்னி கிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. பணிக்கர் சொன்னது பலித்ததாக காட்டுவதற்காக இத்திட்டம் தீட்டியுள்ளனர். ஜெயமாலா, உன்னி கிருஷ்ண பணிக்கர் மற்றும் அவரது உதவியாளர் ரகுபதி ஆகிய 3 பேர் மீது குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் உன்னிகிருஷ்ண பணிக்கர் முதல் குற்றவாளியாகவும், ரகுபதி 2வது குற்றவாளியாகவும், ஜெயமாலா 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த குற்றபிரிவு போலீசார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரான்னி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயமாலா உள்பட 3 பேரும் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நேரில் ஆஜாராகும்படி ரான்னி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











