விலாடிவாஸ்டாக் டூ சுப்ரமணியபுரம்!

சுப்ரமணியபுரம் படத்தில் ஸ்வாதி வெட்கப்பட்டு சிரித்தபடி வந்த காட்சிகள் இன்னும் மனசை விட்டு போகாமல் உள்ளன. ஆனால் உண்மையில், அவர் படு கலகலப்பானவர், வாயாடி என்று பெயரெடுத்தவர்.
அவரது பிறப்பு முதல் இப்போதைய நிலை வரை ஏகப்பட்ட சுவாரஸ்ய சமாச்சாரங்களுக்கு சொந்தக்காரியாக இருக்கிறார் ஸ்வாதி.
ஸ்வாதி பிறந்தது இந்தியாவிலேயே கிடையாதாம். ரஷ்யாவின் விலாடிவாஸ்டாக்கில்தான் பிறந்தாராம். அவரது தந்தை இந்திய கடற்படையில் அப்போது பணியாற்றி வந்தார். பணி நிமித்தம் அவர் விலாடிவாஸ்டாக்கில் இருந்துள்ளார். நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றியுள்ளார் ஸ்வாதியின் தந்தை.
இதனால் ஸ்வாதி விலாடிவாஸ்டாக்கில்தான் பிறந்தாராம். ரஷ்ய மருத்துவமனையில் பிறந்த இவரது அழகைப் பார்த்ததும் அங்கிருந்த ரஷ்ய பெண் டாக்டர், இவருக்கு ஸ்வட்லேனா என்று பெயரிட்டுள்ளார்.
ஸ்வட்லேனா என்றால் ரஷ்ய மொழியில் அழகிய பெண் என்று பொருளாம். ஆனால் ஸ்வாதி என்று அவரது தாயார்தான் மாற்றி விட்டாராம்.
பின்னர் மும்பைக்கு இடம் பெயர்ந்தது ஸ்வாதியின் குடும்பம். பிறகு விசாகப்பட்டனம் வந்து சேர்ந்துள்ளனர். விசாகப்பட்டனத்தில்தான் இளம் வயதைக் கழித்தாராம் ஸ்வாதி. அவர் பிளஸ் ஒன் படிக்கும்போதுதான் ஹைதராபாத்துக்கு வந்து சேர்ந்தார்களாம்.
பின்னர் மா டிவியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்து அதில் சேர்ந்து பிரபலமானார் ஸ்வாதி. அந்த பிரபலம்தான் அவரை சுப்ரமணியபுரத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்ததாம்.
மா டிவியில் கலர்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்தளித்த அவருக்கு நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அப்போது 17 வயதுதான் ஆனதால் அவரை வீட்டில் நடிக்க விடவில்லையாம். ஸ்வாதிக்கும் கூட நடிப்பு மீது மோகம் இல்லையாம்.
இதற்கிடையே பட்டப்படிப்பிலும் சேர்ந்தார். முதலாமாண்டை முடித்த போதுதான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து டேஞ்சர் என்ற படத்தில் நடித்தார். ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ணவம்சிதான் அதை இயக்கினார்.
2வது வருடப் படிப்பை முடித்தபோது கிடைத்த வாய்ப்புதான் செல்வராகவனின் அடவரி மடலகு அர்த்தலு வெருலே. இப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்தார் ஸ்வாதி.
3வது வருடப் படிப்பை முடித்த போது கிடைத்த வாய்ப்புதான் சுப்ரமணியபுரம். பின்னர் அஷ்ட செம்மா படத்திலும் நடித்தார்.
இப்படியாக வருடத்திற்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் நடித்துள்ளார் ஸ்வாதி.
இடையில் ஜல்சா படத்தில் ஹீரோயின் இலியானவுக்காக டப்பிங் பேசினாராம் ஸ்வாதி. நடிப்பை விட டப்பிங் ரொம்ப கஷ்டம் என்பது ஸ்வாதியின் கருத்து.
படப்பிடிப்பு இல்லாதபோது தானே உருவாக்கியுள்ள பிளாக்கில் எதையாவது எழுதிக் கொண்டிருப்பாராம் ஸ்வாதி.
இப்போது பட்டப்படிப்பை முடித்து விட்ட ஸ்வாதி, நல்ல கதை கிடைத்தால்தான் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் படு கேஷுவலாக.


Click it and Unblock the Notifications











