'கொடுவா பாண்டியும்', மேகா நாயரும்!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுப்பவர் சஞ்சய் ராம். இவருடைய தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகும் படம்தான் பூவா தலையா. தஞ்சை பக்கம் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்குகிறாராம்.
படத்தில் இரு ஹீரோக்கள், இரு ஹீரோயின்கள். உதயாவும், கிருஷ்ணகுமாரும் ஹீரோக்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடி போடுகிறார்கள் மேகா நாயரும், ஷெரீனும்.
கொடுவா பாண்டி என்ற கேரக்டரில் உதயாவும், கொம்புத் தேவன் என்ற கேரக்டரில் கிருஷ்ணகுமாரும் நடிக்கின்றனர். இருவரும் தாதாக்கள். இவர்களுக்கிடையே ஏற்படும் மோதல்தான் இந்தப் படத்தின் கதையாம்.
தாதாக்கள் கதை என்பதால் படத்தில் சாப்ட் பார்ட்டுக்காக ஷெரீனையும், மேகா நாயரையும் போட்டுள்ளனர். இருவருக்கும் நடிப்போடு, கிளாமருக்கு நிறைய வாய்ப்புகளாம். அதேசமயம், திகட்டாத அளவுக்கு இவை எல்லாம் சரிவிகித சமானத்தில் இருக்குமாம்.
பசுபதி ராசக்காபாளையம் படத்தில் கேரளத்து அம்மணியாக கிளாமர் காட்டிய மேகா, அடுத்து தங்கம் படத்தில் முழு நீள கவர்ச்சிகர நாயகியாக நடித்தார். அதன் பின்னர் மேகாவைத் தேடி வாய்ப்பு மேகங்கள் போகவில்லை. இப்போது சஞ்சய் ராம் புண்ணியத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு. இதை வைத்து விட்ட இடத்தைப் பிடித்து விடவேன் என்று சொல்கிறார் மேகா.
ஷெரீனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். பூவா தலையா இந்த இரு பூவையருக்கும் வாய்ப்புகளை அள்ளித் தருமா என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











