வேலைக்காரி விவகாரம்: ஆசினிடம் போலீஸ் விசாரணை

சென்னை தேனாம்பேட்டை, கருணாநிதி காலனியில் வசிப்பவர் நரசம்மா. இவரது மகள் பியூலா (வயது 22), நடிகை ஆசினிடம் வேலை பார்த்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகை ஆசின், பியூலாவை உடன் அழைத்துச் செல்வார்.
ஆசின் இப்போது இந்தியில் தயாராகும் கஜினி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் மும்பை சென்று விட்டார். உடன் வேலைக்கார பெண் பியூலாவும் சென்றிருந்தார்.
ஆசினிடம் சென்ற பிறகு தன் மகள் வீட்டுக்கு எந்தத் தகவலும் தருவதில்லை என்றும், பியூலாவை அடிமை மாதிரி வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் நரசம்மா. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸில் சில வாரங்களுக்கு முன் அவர் புகார் செய்திருந்ததும் அதன் அடிப்படையில் அப்போதே போலீசார் ஆசினிடமும், பியூலாவிடமும் செல்போனில் விசாரணை நடத்தியதும் நினைவிருக்கலாம்.
சம்பளப் பணத்தைக் கொடுக்காத ஆத்திரத்தில் தன் தாயார் வேண்டுமன்றே தன் மீது புகார் கூறுவதாக பியூலா போலீசில் அப்போது தெரிவித்திருந்தார்.
போலீஸ், வழக்கு என்று வருவதை விரும்பாத ஆசினும், பியூலாவை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்துவதாகக் கூறியிருந்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
ஆசின் மீது மீண்டும் புகார்:
இதனால், நரசம்மா மீண்டும் ஒரு புகார் மனுவை தேனாம்பேட்டை போலீசில் கொடுத்தார். நடிகை ஆசின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து தன்னுடைய மகள் பியூலாவை மீட்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதனால், தனி போலீஸ் படையை மும்பைக்கு அனுப்பி நடிகை ஆசினிடமும், வேலைக்காரப் பெண் பியூலாவிடமும் நேரடியாக விசாரணை நடத்த சென்னை மாநகர் போலீஸ் முடிவு செய்து, தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் அருமைராஜ் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பைக்கு அனுப்பியது.
போலீசார் மும்பை வந்த போது, மும்பை அந்தேரியில் தனது கஜினி பட ஷூட்டிங்கில் இருந்தார் ஆசின். வேலைக்கார பெண் பியூலாவும் உடன் இருந்தார்.
படப்பிடிப்பில் வைத்தே அவர்கள் இருவரிடமும் விசரணை நடத்தியது போலீஸ். சாரணையில், நடிகை ஆசின் ஏற்கனவே செல்போனில் தெரிவித்த தகவலையே கூறினார். பியூலாவை அவரது தாயாரிடம் ஒப்படைக்க எப்போதும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பியூலாவோ, தாயாரிடம் போகமாட்டேன் என்றும், நடிகை ஆசின் தன்னை நல்லமுறையில் நடத்துவதாகவும், அவருடனேயே இருக்க போவதாகவும் கூறினார். இருவரது வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்தனர்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் பியூலாவை, அவரது தாயார் முன்னிலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நடிகை ஆசினை, போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஆசின் சம்மதம் தெரிவித்தார்.
இந்த நேரடி விசாரணையிலும், வேலைக்காரப் பெண் உறுதியாக நின்றால், அவர் விருப்பப்படியே ஆசினுடன் இருக்க விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











