கோலிவுட்டில் கோட்டை கட்ட காஜல் அகர்வால் ஆசை!

தெலுங்கு திரையுலகை ஆண்டு வரும் நடிகைகளில் இரண்டு பேரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் இலியானாவும், காஜல் அகர்வாலும் தான்.
தற்போது இந்த இருவருமே தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். இலியானா ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். காஜல் கேவி ஆனந்த் படத்தில் சூரியாவுடன் நடிக்கவிருக்கிறார்.
காஜல் அகர்வால் அவ்வப்போது கோலிவுட்டில் வந்து தலையைக் காட்டிச் செல்வது வழக்கம். தற்போது அம்மணிக்கு தமிழில் நம்பர் 1 நடிகையாகும் ஆசை வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கில் அருந்ததி மூலம் பிரபலமான அனுஷ்கா தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அதே வரிசையில் தானும் சேர நினைக்கிறார் காஜல். தமிழில் தனக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்று அவர் நினைப்பது நான் மகான் அல்ல படத்தை. இப்போது இந்தியில் சிங்கம் படத்தில் நடித்துள்ள காஜல், தன்னைத் தென்னிந்திய நடிகை என்று அழைப்பதையே விரும்பாதவர். இருந்தாலும் தென்னிந்தியப் படங்கள்தான் தொடர்ந்து அவருக்கு கை கொடுத்து வருகின்றன.
இதைப் புரிந்து கொண்டோ என்னவோ தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறார் காஜல். அதிலும் தமிழ் மீது இப்போது அவருக்கு தனி பாசமே வந்துள்ளதாக தெரிகிறது. தமிழில் தள்ளாட்டத்தில் இருக்கும் முதலிடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ள காஜல், இதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கப் போகிறார் என்பதை கோலிவுட்டினர் ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து விரைவில்சென்னைக்கு குடிபெயர்வார் காஜல் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











