நான் பாண்ட் 'கேர்ள்' அல்ல-ஷில்பா

ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு அகில உலகப் புகழ் பெற்ற நடிகையாக பிக் பிரதர் புகழ் ஷில்பா ஷெட்டி மாறியுள்ளார். இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்குமாக மாறி மாறிப் பறந்து கொண்டிருக்கிறார் - நடிக்கவும், விழாக்களில் பங்கேற்கவும்.
இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஷில்பா ஷெட்டி, கவர்ச்சிகரமான ரோலில், ஜேம்ஸ் பாண்ட் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஷில்பா அதை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிச்சயமாக நான் பாண்ட் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறேன். அஏது உண்மைதான். அது என்ன படம் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. அது சீக்ரெட்.
நிறைய சர்வதேசப் படங்கள் என்னைத் தேடி வருகின்றன. ஆனால் இந்திதான் எனக்குப் பிடித்திருக்கிறது. முழுக்க முழுக்க இந்திக்குத்தான் முழுக் கவனத்தையும் கொடுக்க விரும்புகிறேன். பாலிவுட்டைதான் நான் அதிகம் நேசிக்கிறேன்.
அதே சமயம், ஹாலிவுட்டை நான் வெறுக்கவில்லை. கதை பிடித்திருந்தால், எனக்கு பொருத்தமானதாக இருந்தால், எனக்கும் முக்கியத்துவம் இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார் ஷில்பா.
ஷில்பா தற்போது சன்னி தியோலுக்கு ஜோடியாக தி மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வயலின் கலைஞராக வருகிறாராம் ஷில்பா. இதற்காக வயலின் கற்கப் போய் கழுத்து வலி வந்து விட்டதாம் ஷில்பாவுக்கு. இதை சரி செய்ய தற்போது 'புஜங்காசனம்' செய்து கொண்டிருக்கிறாராம்!


Click it and Unblock the Notifications











