பில்லா 2 நாயகி ஹூமா நீக்கம் - அஜீத் ஜோடி பார்வதி ஓமண குட்டன்!

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் பில்லா 2.
சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம், முன்பு ரஜினி நடித்து வெளியான பில்லாவின் முன் தொடர்ச்சியாகும்.
இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றவர். 2008-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்தவர். இந்தியாவின் முன்னணி மாடலாகத் திகழும் பார்வதி, மிஸ் போட்டோஜெனிக், மிஸ் பர்சனாலிட்டி உள்பட பல பட்டங்களை வென்றுள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசுகையில், "அஜீத்துக்கு ஜோடியாக, எடுத்த எடுப்பில் தமிழில் நடிப்பது பெருமையாக உள்ளது," என்றார்.
படம் ஆரம்பித்த போது, ஹூமா குரேஷி என்ற மாடல்தான் அஜீத் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
"ஆனால் படம் தொடங்கும் தேதியில் ஏற்பட்ட சில மாறுதல்கள் காரணமாக ஹூமாவின் தேதிகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. வேறு வழியில்லாத நிலையில், பார்வதியை தேர்வு செய்தோம். ஆனால், இந்தப் படத்துக்காக நடந்த ஆடிஷனில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் பார்வதி," என்று ஐஎன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.
பிரேசில் மாடல் புருனா அப்துல்லா...
இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரேசில் நாட்டின் பிரபல மாடல் புருனா அப்துல்லா நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது அதனை ஐஎன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











