அம்முவாகிய நான் பட நாயகி பாரதியின் கணவருக்கு சிபிஐ வலைவீச்சு

அம்முவாகிய நான் படத்தில் விபச்சாரப் பெண் வேடம் ஏற்று நடித்திருந்தார் பாரதி. அதன் பின்னர் நடிக்கவில்லை. கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவரது கணவர் பெயர் தணிகைவேல். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.முருகையனின் பேரன் ஆவார்.
தணிகைவேலுக்கு பாரதி 3வது மனைவி என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. ரகசியக் கல்யாணமாக இது நடந்தது.
முன்பு மதிமுகவில் செயல்பட்டு வந்தார் தணிகைவேல். செஞ்சி ராமச்சந்திரன் திமுகவுக்கு வந்து சேர்ந்தபோது அவருடன் வந்தவர்களில் தணிகைவேலும் ஒருவர்.
சென்னையில் தங்கியிருந்து வரும் தணிகைவேல் ஆடம்பரமாக செலவு செய்யும் பேர்வழி ஆவார். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அவரது கையில் எப்போதும் பணம் புரளுமாம். இந்த நிலையில் தற்போது இவரை சிபிஐ தேடி வருகிறது.
திருவண்ணாமலையில் உள்ள தேசிய வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் போலி நபர்களை உருவாக்கி அந்தப்பணத்தை கையாடியுள்ளார் தணிகைவேல் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி சிபிஐயில் புகார் கொடுக்கவே அவரை தற்போது சிபிஐ தேடத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











