தப்பினார் ஆசின்!

ஓகனேக்கல் விவகாரம் தொடர்பாக சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ஆசின் உள்பட பலரும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் பெறப்பட்ட அனைவரும் விளக்கம் அளித்து விட்டனர். ஆனால் ஆசின் மட்டும் அனுப்பாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஆசின் உடனடியாக விளக்கத்தை அனுப்பி வைத்தார்.
மேலும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகளை கடந்த சனிக்கிழமை நேரில் சந்தித்தும் விளக்கம் அளித்தார் ஆசின்.
அவரது விளக்கத்தைக் கேட்டு திருப்தி அடைந்த நடிகர் சங்க நிர்வாகிகள், ஆசின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஆசின் மீது எந்தத் தவறும் இல்லை. அவருக்கு சரியான முறையில் செய்தி போய்ச் சேரவில்லை. எனவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
மற்றவர்களிடமிருந்தும் விளக்கங்கள் வந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.
ஆசின் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அளித்த நேரடி வாக்குமூலத்தில், வராததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கஜினி இந்திப் படப்பிடிப்பில் நான் மாட்டிக் கொண்டு விட்டேன். மேலும் எனக்கு உண்ணாவிரதம் குறித்து யாரும் சொல்லவில்லை. எனவே அதுகுறித்து எனக்குத் தெரியாது.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் இடையிலான காவிரிப் பிரச்சினை குறித்தும் எனக்குத் தெரியாது என்று கூறினாராம் ஆசின்.
இந்த விளக்கத்தைக் கொடுத்து விடடு அன்று மாலையே விமானத்தைப் பிடித்து ஹைதராபாத் பறந்து போய் விட்டாராம் ஆசின்.


Click it and Unblock the Notifications











