பூமிகாவின் 'ஆனந்தம் ஆயிரம்'

சில்லுன்னு ஒரு காதல் படத்துக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலாகிவிட்ட பூமிகா, அதன் பிறகு நடித்த தெலுங்குப் படம் சத்யபாமா. இந்தப் படம்தான் இப்போது தமிழில் ஆனந்தம் ஆயிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் பூமிகாவுக்கு ஜோடி சிவா எனும் புதுமுகம்.
ரங்கீலா எண்டர்பிரைசஸ் சார்பில் சித்திரைச் செல்வன் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் திரைப்படக் கல்லூரி மாணவர் நானு ஹரி. தமிழில் இவருக்கு முதல் படம் இதுதான்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஹரி இப்படிக் கூறுகிறார்:
"சந்தோஷத்தைச் சந்தோஷமா சொல்லணும். ஆனா கஷ்டத்தை சந்தோஷமா சொல்வது கயிறு மேல் நடப்பது மாதிரி சாகஸமான வேலை. கொஞ்சம் தவறினாலும் கவுந்திடும். அந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்தான் இந்தப் படம்.
இந்த ஸ்கிரிப்டை உருவாக்கும்போது எனக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் வரும். காதலுக்கு அந்த வலிமை உண்டு. காதலின் வலியையும் சுகத்தையும் அனுபவிக்கிற மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே இருக்கு.
இந்தக் கதையை நான் முதலில் தெலுங்கில்தான் பண்ணினேன். சத்யபாமா எனும் பெயரில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு. இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என பேதமின்றி எல்லோரும் நூறு சதவிகிதம் ரசித்துப் பார்த்த படம் இது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு.
பூமிகாவோட கேரியர்ல பெருமையா சொல்லிக்கிற படமா இது இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. அந்த அளவு கேரக்டராவே ஒன்றிப்போய் வாழ்ந்திருப்பாங்க பூமிகா.
இந்தக் கதையை எடுக்கும்போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே மாதிரி படத்தின் வெற்றியும் இருந்தது. அந்தப் படம்தான் இப்போது ஆனந்தம் ஆயிரமாக தமிழுக்கும் வருகிறது. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்..."
எப்போதுமே தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்கு நல்ல பலன் இருக்கத்தானே செய்கிறது!


Click it and Unblock the Notifications











