Samantha - கணவரை பிரிந்த உங்களின் அறிவுரை தேவையில்லை.. சமந்தாவை விளாசிய ரசிகர்.. அவர் ரியாக்ஷன் இதுதான்
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக சமீபத்தில்தான் அவர் அறிவித்திருந்தார்.
முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.
மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.
சிட்டாடல் வெப் சீரிஸ்: அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிக்க கமிட்டானார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டிகே இயக்கும் அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. அதில் சமந்தாவும் கலந்துகொண்டிருக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்தச் சூழலில் சமீபத்தில் நடிகை சமந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "நடிப்புக்கு மீண்டும் திரும்புகிறேன். இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல்தான் இருந்தேன். ஆனால் எனது நண்பருடன் உடல் ஆரோக்கியம் குறித்து உருவாக்கியுள்ள போட்காஸ்ட் ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுகிறேன். உங்களில் சிலருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர் விமர்சனம்: இந்நிலையில் உடல்நலம் சார்ந்த போட்காஸ்ட் வீடியோ 19ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், 'உங்கள் கணவரை விட்டு நீங்கள் ஏன் பிரிந்தீர்கள்?.. உடல்நலம் சார்ந்து தோல்வியுற்ற நீங்கள் கொடுக்கும் அறிவுரை தேவையே இல்லை' என்று கமெண்ட் செய்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, ' இம்மாதிரியான வெறுப்பை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நோய் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்' என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











