ரஜினிகாந்தை ரொம்பவே தொல்லை பண்ணிட்டேன்.. கமல் சார் பாதை தனி.. வேட்டையன் ஆடியோ லாஞ்சில் அபிராமி!
சென்னை: வேட்டையன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் கலக்கலான உடையை அணிந்துக் கொண்டு வந்த நடிகை அபிராமி வேட்டையன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்த அபிராமி சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான பாபா பிளாக்ஷீப் படத்தில் நடித்த அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

இந்த ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப்பின் மனைவியாக நடித்து அசத்திய அபிராமி ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வேட்டையன் ரெட் கார்ப்பெட்: லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் போல செம அழகான உடையை அணிந்துக் கொண்டு அபிராமி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட திறமையான நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், பெண்களுக்கான பங்கும் சரி சமமாக கொடுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமல் படங்களில்: நடிகை அபிராமி தான் தற்போது கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார். மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் கமல்ஹாசனின் தக் லைஃப் படங்களில் நடித்துள்ளார். வேட்டையன் அடுத்த மாதமும் தக் லைஃப் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் வெளியாக காத்திருக்கிறது.
ரஜினி வேற கமல் வேற: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களில் நடித்து வருகிறீர்கள் அதற்கான வேறுபாட்டை கூற முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அபிராமி ரஜினிகாந்த் ஸ்டைலில் தனி வழி என்றால் கமல்ஹாசனும் தனக்கான ஒரு தனி பாதையில் பயணித்து அதை தெளிவுப்படுத்திக் கொண்டே செல்கிறார் என்றார். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், இரண்டு படங்களின் ரிலீஸுக்காகவும் அபிராமி காத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியை தொல்லைப் பண்ணிட்டேன்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடித்ததை விட அவரிடம் தனியாக அமர்ந்து பேசும் போது ஏகப்பட்ட விஷயங்கள் அறிந்துக் கொள்ள முடிந்தது. அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு ரொம்பவே தொல்லை பண்ணிட்டேன். அவரோட மூளை எப்படி வொர்க் பண்ணுதுன்னு அறிந்துக் கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருந்தது. வேட்டையன் படத்தின் கதை கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அக்டோபர் 10ம் தேதி மிகப்பெரிய ட்ரீட் ரசிகர்களுக்கு தியேட்டரில் காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார் அபிராமி.
ரஜினிகாந்த் வருகை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள காட்சிகளை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இன்று நடைபெற்று வரும் இசை வெளியீட்டு விழாவில் அவருடைய ஸ்பீச்சை கேட்கத்தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











