ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்தா?.. அபிஷேக் பச்சன் கொடுத்த விளக்கம்.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து
மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரியவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து அபிஷேக் இப்போது விளக்கமளித்திருக்கிறார்.
உலக அழகி என்ற பட்டத்தின் மீது பல பெண்களுக்கு ஆசை உண்டு. அந்த ஆசையை இந்தியாவிலிருந்து சென்று நிறைவேற்றியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஐஸ்வர்யா ராய்தான் முதன்மை இடத்தில் இருக்கிறார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்தப் படம் க்ளாசிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ஹிந்தியில் பிஸி: தமிழில் அவர் அறிமுகமானாலும் தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்காமல் ஹிந்தி பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கு முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்துவந்த ஐஸ்; அவ்வப்போது தமிழிலும் நடிக்க மறக்கவில்லை. அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.
அசால்ட் நந்தினி: பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை தனது கற்பனையிலிருந்து உருவாக்கியிருந்தார் எழுத்தாளர் கல்கி. அந்த கற்பனை கதாபாத்திரத்துக்கு படத்தில் உயிர் கூட்டியிருந்தார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் கொடுத்திருந்த நடிப்பு அவரது கரியரில் தி பெஸ்ட்டாக இருக்கிறது என்று படம் வந்தபோது ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இதற்கிடையே பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க அண்மையில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அதேசமயம் அந்த திருமணத்தில் ஒரு புகைப்படம் பரவியது. அதாவது ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலர் சல்மான் கானோடு இருக்கும்படியான புகைப்படம்தான் அது. ஆனால் அது போலியானது என்பது உறுதியானது.
அபிஷேக் விளக்கம்: இந்நிலையில் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் விவாகரத்து நடைபெறவிருப்பதாக வெளியான தகவல் குறித்து அபிஷேக் பச்சன் விளக்கமளித்திருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











