Vijayakanth - அந்த நடிகை எல்லாம் விஜயகாந்த்துக்கு கால் தூசிக்கு சமம் இல்லை.. கொந்தளிக்கும் மீசை ராஜேந்திரன்
சென்னை: நடிகரும் தேமுதி நிறுவனருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாதவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களது வீட்டில் ஒருவர் இறந்துபோனால் என்ன சோகம் இருக்குமோ அதே சோகம்தான் பெரும்பாலானோரிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லடக்கம்: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த சூழலில் நடிகரும், விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.
மீசை ராஜேந்திரன் பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த் இறந்தபோது நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் எல்லாம் நடிகர்கள் இல்லை. அவர் இறந்து ஒரு வாரம் கழித்து நினைவிடத்துக்கு வந்து நடிக்கிறார்கள் பாருங்கள் அவர்கள்தான் அருமையான நடிகர்கள். சிறப்பாக நடிக்கிறார்கள். சூர்யாவோ விஷாலோ நினைத்திருந்தால் ஒரு விமானத்தை பிடித்து அடுத்த நாளே வந்திருக்கலாம்.
அந்த நடிகை கால் தூசி: ஆனால் அவர்கள் வரவில்லை. இவர்கள் எல்லாம் விஜயகாந்த்துக்காக வரவில்லை. கலைஞர் 100 விழாவுக்காக வந்தவர்கள். மக்கள் திட்டுவார்கள் என்பதால் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு வந்துவிட்டு கலைஞர் 100 விழாவுக்கு போனார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் விஜயகாந்த்தின் கால் தூசி. விஜயகாந்த்தை பற்றி பேசுவதற்கு அவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது. சூர்யா வந்து அழுகிறார்.
ஒரே மாதிரி சாப்பாடு: நான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் விஜயகாந்த்தை போல் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு போடுவேன் என அருண் விஜய் சொல்கிறார். இதை ஏன் இத்தனை வருடங்களாக அவர் செய்யவில்லை. எத்தனை நாளைக்கு போடுவார். விஜயகாந்த் பல வருடங்களாக அதை செய்துகொண்டே இருந்தார். இவர்கள் எல்லாம் சும்மா நடிக்கிறார்கள்.
விஷாலின் அப்பட்டமான நடிப்பு: நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் அப்பட்டமாக நடிக்கிறார். நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். எனவே நடிகர் சங்க கட்டடத்துக்கு அவர் பெயரை வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டால் மழுப்பலாக பதில் சொல்கிறார். கார்த்தியிடம் நானே அதுகுறித்து நேரில் கேட்டேன். அவரும் மழுப்பலாகவே பதில் சொல்கிறார்.
எல்லோரும் பயன் அடைந்தவர்கள்: திரையுலகில் உள்ள எல்லொருமே விஜயகாந்த்தின் மூலம் பயன் அடைந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நன்றி உணர்ச்சியே இல்லை. நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை. வடிவேலு யார் மரணத்துக்கு செல்லமாட்டார். அவர் மரணத்துக்கு யார் போகிறார் என்று பார்க்கலாம் என ஒரு நடிகர் சொன்னார். ஆனால் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று நானே சொன்னேன்" என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷிடம் விஜயகாந்த் மரணத்துக்கு ஏன் நேரில் வரவில்லை என்று ஒரு கடை திறப்பு விழாவின்போது செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், நான் புதுச்சேரியில் இருந்தேன் என்று கூறிவிட்டு மழுப்பலாக பேசினார். பிறகு விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு அவர் வந்து தனது அஞ்சலியை செலுத்தினார்.


Click it and Unblock the Notifications











