மம்முட்டிக்கு புற்றுநோயா? உடல் நலம் பெற சபரிமலையில் மோகன்லால் சிறப்பு பிரார்த்தனை!
சென்னை: மலையாள நடிகரான மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த வாரம் இணையத்தில் செய்திகள் பரவின. ஆனால், அது வெறும் வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகரும், மம்முட்டியின் நெருங்கிய நண்பருமான மோகன்லால், அவர் உடல் நலம் பெற வேண்டி, இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் உஷா பூஜை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் மம்முட்டி. இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழிலும் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், மறுமலர்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 58 கோடியை அள்ளியது. ராகுல் சதாசிவன் இயக்கிய இத்திரைப்படத்தில், மம்மூட்டி, சித்தார்த் பரதன், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மம்முட்டிக்கு என்ன ஆச்சு: நடிகர் மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் நடிப்பிலிருந்து விலகுவதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இணையத்தில் பரவிய இந்த செய்தி, அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், மம்மூட்டி குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது. அவர் தற்போது விடுமுறையில் இருக்கிறார் என்றும், ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருவதால், சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்திருப்பதாகவும், நோன்பு முடிந்த பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் மம்மூட்டி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

நண்பனுக்காக சிறப்பு பூஜை: இந்நிலையில், நடிகர் மம்முட்டி உடல்நலம் பெறவேண்டி, நடிகர் மோகன் லால், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் உஷா பூஜை வழிபாடு நடத்தியுள்ளார், இதில் மம்முட்டியின் இயற்பெயரான முஹம்மது குட்டி விசாகம் என்ற பெயரில் மோகன் லால் 'உஷா பூஜை' செய்துள்ளார். கணபதி கோவிலில் இருந்து 'இருமுடிகெட்டு' எடுத்துச் சென்ற மோகன்லால் செவ்வாய்க்கிழமை மாலை சபரிமலைக்கு சென்றார். இதைத்தொடர்ந்து இன்று காலை 'நெய்யபிஷேகம்' செய்துவிட்டு, மம்முட்டி உடல் நலம் பெற சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பினார். ஏற்கனவே மம்முட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் மோகன்லால் அவரது பெயரில் அர்ச்சனை செய்தது கேரளாவில் பேசும் பொருளாகி உள்ளது.

எம்புரான் : மலையாள நடிகரான மோகன் லால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது நண்பர் மம்முட்டிக்காக சபரிமலைக்கு வந்துள்ளார். இதற்கு முன் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான 'புலிமுருகன்' படம் வெளியான போது சபரிமலைக்கு வந்தார். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 200 கோடியை தாண்டி வசூலித்த இப்படம், ஆறு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமாக எம்புரான் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் டோமினோ தாமஸ் கேரள முதலமைச்சராக நடித்துள்ளார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்தை குழப்பம் இன்றி பார்ப்பதற்கு ஏதுவாக லூசிஃபர் படத்தின் முதல் பாகம் நாளை ரீ ரிலீஸாக உள்ளது. எம்புரான் படத்திற்காகத்தான் மோகன்லால் தற்போது சபரிமலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











