திகிலூட்டும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்… புதிய படத்தின் அப்டேட்!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஆசிரியராக நடிக்கிறார்.
பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய திகில் படங்களைத் தொடர்ந்து மீண்டும் திகில் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அட்டக்கத்தியில் அறிமுகம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது. அதையடுத்து காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தனது அசாதாரண நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

முன்னணி நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானியுடன் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனுக்கு கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பல திரைப்படங்களில்
தமிழில் டிரைவர் ஜமுனா, விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களும், 3 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

மீண்டும் திகில் படத்தில்
பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய திகில் கதைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். தற்போது மீண்டும் திகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டி உள்ளது. அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

புதிய படத்தின் பூஜை
GS ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். மேலும் பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், பிராங்க்ஸ்டர் ராகுல், பிரவீன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பாரத் ஆசீவகன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படம் பூஜையோடு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











