பூக்கள் பூத்த தருணம்.. எமி ஜாக்சனுக்கு சிம்பிளாக நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை எமி ஜாக்சன் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். கடைசியாக அவர் தமிழில் மிஷன் - சாப்டர் 1 படத்தில் நடித்தார். அதில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமண உறவு பாதியில் முடிந்ததை அடுத்து இரண்டாவதாக ஒருவரை காதலித்தார். தற்போது அவர்களுக்கு சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
பிரிட்டிஷில் இருக்கும் Isle of Man என்ற நகரத்தில் பிறந்தவர் எமி ஜாக்சன். கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு மாடலிங் மேல் ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து தனது கவனத்தை அதில் முழுக்க முழுக்க செலுத்தினார். அதன் பலனாக தனது 17ஆவது வயதில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் இரண்டாவது இடம் பெற்றார். இதனால் அவர் மீது ஊடகங்களின் வெளிச்சம் பட்டது. சூழல் இப்படி இருக்க அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

வாம்மா துரையம்மா: அந்தவகையில் அவரை முதன்முதலாக சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நடந்த காதல் கதையை படமாக மதராசபட்டினம் என்ற பெயரில் எடுத்தார் விஜய். ஒரு இந்தியருக்கும், பிரிட்டிஷை சேர்ந்த பெண்ணுக்கும் நடக்கும் காதல்தான் கதை. அந்த பிரிட்டிஷ் பெண் கதாபாத்திற்காக எமி ஜாக்சனை களமிறக்கினார் விஜய். அந்த சமயத்தில் அது பலரிடம் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதராசபட்டினம் படத்தில் துரையம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
பிஸியான நடிகை: படத்தில் எமியின் நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டது. முக்கியமாக பூக்கள் பூக்கும் தருணம் பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏமி பேசிய, 'மறந்துட்டியா' என்ற வார்த்தையிலிருந்து கோலிவுட் ரசிகர்க்ள் எமியை மறக்கவே இல்லை. தொடர்ந்து தமிழில் அவர் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேபோல் ஹிந்தியில் ஏக் தீவானா தா (விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்) படத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த அவர்; ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
முதல் திருமணம்: தனது கரியர் பீக்கில் இருந்தபோதே 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவருடன் பார்ட்னராக வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சில வருடங்களில் அவர்களது உறவு திடீரென பிரிவில் முடிந்தது. அதற்கு பிறகு எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்துவந்த எமி; அவருடன் சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
நடந்து முடிந்த திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை எட் வெஸ்ட்விக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். திருமணத்தில் எமி ஜாக்சன் வெள்ளை நிற கவுனிலும், வெஸ்ட்விக் வெள்ளை நிற கோட்டும் அணிந்திருந்தனர். அந்த்ப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











