Andrea: ஆண்ட்ரியாவிற்கு இது வில்லி சீசன் போலயே.. கவினை தொடர்ந்து அடுத்த ஹீரோவிற்கும் வில்லி!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே சிறுவனுக்கு தாயாக நடித்து அசத்தினார். தொடர்ந்து தமிழில் தேர்ந்தெடுத்த கேரக்டர்களின் மட்டுமே நடித்து வரும் ஆண்ட்ரியா பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் தொடர்ந்து கோலிவுட்டில் ஜொலித்து வருகிறார்.
பல ஹிட் பாடல்களை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்நிலையில் சர்வதேச அளவில் பல இசைக்கச்சேரிகளிலும் பாடிவரும் ஆண்ட்ரியா தமிழில் கவினுக்கு வில்லியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தெலுங்கிலும் பிரபல நடிகருக்கு வில்லியாக ஆண்ட்ரியா நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா: பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக தன்னுடைய பயணத்தை நடிகை ஆண்ட்ரியா துவங்கினார். பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் ஜொலித்து வரும் ஆண்ட்ரியா, சர்வதேச அளவில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது தமிழில் பிசாசு 2 உள்ளிட்ட சில படங்கள் இவரது நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. பிசாசு 2 படம் நீண்ட காலங்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவினுக்கு வில்லி: அடுத்ததாக நடிகர் கவின் நடிப்பில் விக்ரனன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவினுக்கு வில்லியாக களமிறங்கியுள்ளார் ஆண்ட்ரியா. இதன் பூஜை கடந்த மாதத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு பட நடிகர் நானியின் நானி 32 படத்திலும் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நானிக்கும் வில்லி?: சுஜீத் இயக்கத்தில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தில்தான் வில்லியாக தற்போது ஆண்ட்ரியா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் விரைவில் இதன் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் காணப்பட்டது. இதில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆண்ட்ரியா.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் இவர் வில்லியாக நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய கேரக்டர் சிறப்பாக இருக்கும்படி பார்த்து வருபவர் ஆண்ட்ரியா. அந்த வகையில் இந்தப் படங்களிலும் அவரது கேரக்டர் வெயிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆண்ட்ரியாவின் நடிப்பில் ஒரு அலட்சியப் போக்கு எப்போதுமே இருக்கும் நிலையில், இந்த போக்கு இவரது வில்லத்தனத்திற்கு மிகச்சிறப்பாக பொருந்தும் என்றும் கூறலாம்.


Click it and Unblock the Notifications











