ஏழு கடல் ஏழு மலை எப்படி இருக்கும்?.. மனம் திறந்து பேசிய அஞ்சலி
சென்னை: கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஃபேமஸ் ஆனவர் அஞ்சலி. இடையில் சில காலம் நடிக்காமல் இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவரது நடிப்பில் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் ஏழு கடல் ஏழு மலை படம் எப்படி இருக்கும் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அஞ்சலி.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் அஞ்சலி. தமிழில் அவர் நடித்து முதலில் வெளியான திரைப்படம் கற்றது தமிழ். ராம் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நிஜமாதான் சொல்றியா என்று அவர் பேசும் டயலாக்கை இன்றுவரை பலரும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் அவரது திறமையை பார்த்த பலரும் அஞ்சலிக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று கணித்தன.

பிஸி நடிகை: அவர்களின் கணிப்பை பொய்யாக்காத விதமாக அஞ்சலி தொடர்ந்து படங்களில் நடித்தார். அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் என அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு காரணம் அவர் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்றும்; இல்லை இல்லை அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் பல வதந்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருந்தன,
மீண்டும் நடிப்பு: சூழல் இப்படி இருக்க மீண்டும் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் பகிஷ்கரனா வெப் சீரிஸ், கேங்ஸ் ஆஃப் கோதாவரி வெளியானது. அடுத்ததாக தமிழில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாகவிருக்கிறது. நிச்சயமாக இந்த படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைய வேண்டும் என்று அவரது ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். அதேசமயம் ஷங்கர் இயக்கத்தில் நடித்த கேம் சேஞ்சர் படம் பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
மதகஜராஜா: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக மதகஜராஜா படத்தில் நடித்தார் அஞ்சலி. அந்தப் படம் ஷூட்டிங் முடிந்தும் பல வருடங்கள் ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் திடீர் சர்ப்ரைஸாக இந்தப் படம் பொங்கலையொட்டி சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அஞ்சலி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அஞ்சலி பேட்டி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து பேசியிருக்கிறார் அஞ்சலி. அவர் பேசுகையில், " ஏழு கடல் ஏழு மலை படத்தை நீங்கள் பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்தை பற்றி கூற அழகு என்ற வார்த்தைதான் சரியாக இருக்கும். கற்றது தமிழ் படம் எனக்கு எப்படி மிக முக்கியமான படமாக இருந்ததோ. அதேபோல்தான் ஏழு கடல் ஏழு மலையும் இருக்கும். இதற்காக நான், ராம், நிவின் பாலி என எல்லோருமே கடுமையாக உழைத்திருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











